நீலச் சட்டை

நீலச் சட்டை-சிறுகதை

-சிறுகதை-

வாசலில்  TOLET என்ற போர்டு மாட்டியிருந்த அந்த வீட்டின் ஹாலில் ஒரு நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தார் சுந்தரம். வீட்டில் காலியாயிருந்த அறைகளின் மேல் அவர் பார்வை திரும்பத் திரும்ப படிந்து விலகியது. படுக்கையறைக் கதவில் ஒட்டியிருந்த Dreams can happen என்ற ஸ்டிக்கரை ஒருசில நொடிகள் பார்த்தார். அவர் மகன் ஒட்டி வைத்தது. இப்போது துபாயில் இருக்கிறான். அவன் கனவு அதுதான். மேலே சுழலும் மின்விசிறியைப் பார்த்தார். சின்ன டைல்ஸ் போட்ட தரையைப் பார்த்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது ஓய்வு நேரங்களில் இங்கேதான் ஹாயாக ஒரு பாயைப் போட்டு அனந்தசயனம் கொள்வார். இந்த ஹால் ஜன்னலிலிருந்து வரும் காற்று களைப்பை மறக்கச் செய்யும்.

சுந்தரம் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். ஆளில்லாத, யாராலும் பராமரிக்கப்படாத பக்கத்து வீட்டுக் கொல்லைப்புற கிணற்றடியும் மாமரமும் தெரிந்தன. இந்த அடர் நகரத்தில் ஜன்னல் வழியே இப்படி ஏதாவது பச்சை தெரிவது பாக்கியம் என்று நினைத்தார் அவர். அவர் வாசலில் ஒரு சில தொட்டிச் செடிகள் வாங்கி வைத்திருந்ததெல்லாம்கூட அதன் பொருட்டுத்தான். வருபவர்கள் அதையெல்லாம் பராமரிப்பார்களா என்று தெரியாது. அவர் காலி செய்த பிறகு இந்த வீட்டை வாடகைக்குக் கொடுக்க நேற்றுதான் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்தார். நேற்றுக் காலையிலிருந்து இப்படி வீட்டைத் திறந்து வைத்து உட்கார்ந்திருக்கிறார். ஃபோன் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. ஒரு பத்து இருபது பேர் வந்து பார்த்தும் ஆயிற்று. யாரும் எதுவும் நிச்சயமாகச் சொல்லவில்லை. ஆனால் இன்று சாயங்காலத்துக்குள் யாராவது அட்வான்ஸ் கொடுத்துவிடுவார்கள் என்று நம்பிக்கையாயிருந்தது.

பாக்கெட்டில் மொபைல் அடித்தது. அவசரமாக எடுத்துக் காதில் வைத்தார். விளம்பரம் பார்த்துவிட்டுக் கூப்பிடும் யாரோ ஒருவர்.

‘ஆமா சார்.. இருக்கு.. டபுள் பெட்ரூம், ஒரு ஹால், கிச்சன், அட்டாச்டு பாத்ரூம் ஒண்ணு, அப்றம் காமன் பாத்ரூம், ஃபேன் இருக்கு, ஒரு ரூம்ல விண்டோ ஏசி இருக்கு, லெவன் தவுசண்ட் வாடகை, ஃபிஃப்டி தவ்சண்ட் அட்வான்ஸ், வந்து பாக்கறீங்களா?’

ஒரு சில விநாடிகள் மறுமுனையின் பதிலை செவிமடுத்தார். பிறகு சொன்னார். “ஆமா.. கரெக்ட்.. ஏரிக்கரை ரோட்டிலிருந்து ரெண்டாவது லெஃப்ட்.. நான் வெய்ட் பண்றேன்” சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். இரண்டாவது நிமிடம் மறுபடி மொபைல் அடித்தது. திரையில் பத்மா என்று பெயர் தெரிந்தது. எடுத்துக் காதில் வைத்து “சொல்லுடி’ என்றார் பொதுவாய்.

”காபி டீ எதாவது சாப்டீங்களா? வாடகை, அட்வான்ஸ் எல்லாம் ரொம்ப கராரா பேசாதீங்க என்ன? ஒரு நூறு எறநூறு அப்படி இப்பிடி இருந்தா ஒண்ணும் ப்ரச்சனையில்லை. நல்ல ஆளா இருந்தா சரி. முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க. ஏதாவது சாப்பிடுங்க மறக்காம. அப்றம் லோ சுகர் அது இதுன்னு பொலம்பக்கூடாது.”

“சரிடீ வை.. இப்ப இன்னொருத்தர் பாக்க வர்ரார். நான் அப்றம் கூப்பிடறேன்” என்று வைத்தார்.

இவளும் காலையிலிருந்து ஒரு மூன்று தடவையாவது கூப்பிட்டுவிட்டாள். வழக்கம்போல அக்கறை, கரிசனம், கவலை இவற்றின் கூட்டுக்கலவையாய் வழிகிறது அவள் குரல். ஆனால் எனக்குத்தான் எப்போதும் அன்பாய் பதில் சொல்லத்தெரிவதில்லை என்று நினைத்தார். கல்யாணம் ஆனதிலிருந்து அதட்டியே பழக்கப்பட்டுவிட்டார். ஒரு காபி ஆறிப்போனால்கூட கடினமாய் விமர்சனம் வைக்கிற ஆசாமியிடம் எப்போதும் அடக்கியே வாசிக்கிற கட்டுப்பெட்டி மனைவியாகவே அவளும் காலந்தள்ளிவிட்டாள். அவள் சாப்பிட்டாளா என்று ஒருநாளாவது அவர் விசாரித்திருப்பாரா என்றால் ரொம்ப அபூர்வம் என்பதுதான் பதிலாக இருக்கும். திடீரென ராமகிருஷ்ணன் மனதில் வந்து போனார்.

”கர்மான்னு ஒண்ணு இருக்கு. நாம செய்யற ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். நல்லது பண்ணினா நல்லது. கெட்டது பண்ணினா கெட்டது. சிலருக்கு இந்தப் பிறவியிலேயே கிடைக்கும். சிலருக்கு அடுத்த பிறவியில. இப்ப நாம அனுபவிக்கிற விஷயங்கள் முற்பிறவில செஞ்சதாகக்கூட இருக்கலாம்னு வேதம் சொல்லுது.”

முந்தாநாள் ஏரிக்கரை சாலைக்கு முன்னாள் நண்பர்களைப் பார்க்கப் போனபோது ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தது காதில் மீண்டும் ஒலித்தது. ராமகிருஷ்ணனுக்கு எண்பது வயதிருக்கும். சுந்தரத்துக்கு சூப்பர் சீனியர் அவர். சுற்றிலும் ரிடையர்டு ஆசாமிகள் புடை சூழ அவர் இந்த மாதிரி ஏதாவதொரு சுவாரஸ்ய விஷயத்தைப் பேசிக்கொண்டிருப்பார். அவர்களுடன் சேர்ந்து சுந்தரமும் கேட்டுக்கொண்டிருப்பார். சில சமயம் அவர் யஜுர் வேதம், பிரகதாரண்யக உபநிடதம், கடோபநிஷத் என்பதுபோல கரடுமுரடான டாப்பிக்கையெல்லாம்கூட எடுத்துவிடுவார்.

வீட்டில் பத்மாவை தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தாலும் அவள் தன் மேல் காட்டுகிற அலாதி அன்பு எந்த வகை கர்மாவில் சேரும் என்று குழப்பமாக அவர் யோசித்துக்கொண்டிருக்கும்போது வாசலில் நிழலாடியது.

’வாங்க’ என்று எழுந்தார் சுந்தரம்.

ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஆசாமி. நீலச் சட்டை அணிந்திருந்தான். சிரித்த முகமாக இருந்தான். செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தான். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். ஓ.எம்.ஆரில் ஏதோ ஒரு ஐ.டி. கம்பெனியில் சாஃப்ட்வேர் என்ஜினீயர் என்றான். அடுத்தவாரம் தனக்குத் திருமணம் நடக்கப்போவதாகவும், அதற்காகத்தான் வீடு பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னான்.

”சுத்திப் பாருங்க. புதுசா பெயிண்ட் அடிச்சிருக்கேன். கார் பார்க்கிங் கெடையாது. டூ வீலர் மட்டும்தான். நாங்க வேற வீட்டுக்குப் போனதே பார்க்கிங் ட்ரபுள்னாலதான். நான் அசோக் லேலண்ட் கம்பெனில ஏஜியெம்மா இருந்தேன். வி ஆர் எஸ் வாங்கிட்டேன். முதுகு வலி, பி.பி. முடியல. அப்றம் சுகர் ப்ரச்சனை. எல்லா ரூம்லயும் ஜன்னல் இருக்கு. எக்ஸ்ட்ரா க்ரில் இருக்கு. வெளியிலேர்ந்து யாரும் கையை உள்ள விடமுடியாது. கொசு வலை அடிச்சிருக்கேன். எல்லா லாஃப்டும், வார்ட்ரோபும் க்ளோஸ் பண்ணியிருக்கேன். கண்டா முண்டா சாமான் எது வெச்சாலும் வெளியே தெரியாது. எல்லா சவுகர்யமும் இருக்கு. சொல்லவேண்டியது என்னோட கடமை. ஆனா உங்களுக்குப் புடிக்கணும். என்ன நாஞ் சொல்றது?” காலையிலிருந்து பாடும் அதே பல்லவி.

மெதுவாக எல்லா அறைகளுக்குள்ளும் புகுந்து பொறுமையாய் ஆராய்ந்த நீலச் சட்டை “தண்ணிப் ப்ரச்சனை..’ என்று இழுத்தான்.

“இதுவரைக்கும் தண்ணிப் ப்ரச்சனையே வந்தது கிடையாது. ரெண்டு போர் இருக்கு. பாலார் வாட்டர் கனெக்‌ஷன் இருக்கு. ஒரு வருஷத்துக்குள்ள வந்துரும்.” இதைச் சொல்லும்போது மட்டும் அவர் குரலில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவியதை ஒருவாறு சமாளித்து மறைத்துக்கொண்டார்.

“மழக்காலத்துல தண்ணி உள்ளாற வர்ரது.. அந்த மாதிரி எதுவும்..” பாத்ரூம் கதவைத் தள்ளித் திறந்து தலையைச் சாய்த்து உள்ளே பார்த்தான். க்ளோசெட்டில் கறை தெரிந்தது.

“ச்சேச்சே.. இந்த ஏரியாவுல அந்தப் ப்ராப்ளமே இல்ல. போன மழ வெள்ளத்துக்குக்கூட ஒண்ணும் ஆகல. ஒண்ணு தெரிஞ்சுக்குங்க. பைப்ல தண்ணி வர்லேன்னாலும் ப்ரச்சனை. வீட்டுக்குள்ள தண்ணி வந்துட்டாலும் ப்ரச்சனை. என்ன நாஞ் சொல்றது?”

அவர் சொன்னதற்கு நீலச்சட்டை புன்னகைத்து வைத்தான். ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக வீட்டை சுற்றிச் சுற்றிப் பார்த்தான். “வாடகை கொஞ்சம் ஜாஸ்தி சார். என் பட்ஜெட் மேக்ஸிமம் டென் தவ்ஸண்ட்தான்.. இன்க்ளூடிங் மெயிண்டனென்ஸ்..”

“ஐயயோ, அது கஷ்டம். நான் சொன்ன அமௌண்டுக்கே ஆள் வர ரெடியாயிருக்கு”

வாடகையை குறைக்க முடியாததற்கான விளக்கங்களை அவர் அடுக்க ஆரம்பித்தார். நல்ல லொக்கேஷன். தெரு முக்கில் மளிகைக்கடை. பக்கத்திலேயே பஸ் ஸ்டாப். ஏரிக்கரையில் வாக்கிங் போகலாம். அருகிலேயே பெரிய ஹோட்டல்கள், ஷோரூம்கள். க்ரவுண்ட் ஃப்ளோர்தான் வசதி. ஊரிலிருந்து பெரியவர்கள் வந்தால் படியேறத் தேவையில்லை. பக்கத்து வீடுகள் எல்லாம் பன்னிரண்டாயிரம். இது கம்மி.

”வேணும்னா டக்குனு யோசிச்சுச் சொல்லுங்க தம்பி. இல்லேன்னா போய்ரும்.”

நீலச் சட்டை யோசித்தான். ஹால் ஜன்னல் அருகே சென்று வெளியே எட்டிப்பார்த்தான். ‘இந்த வீட்ல ஆள் இல்லையா சார்? புதர் மண்டிக் கிடக்குது..’ என்றான்.

”முன்ன இருந்தாங்க. ஆரோக்கியசாமின்னு ஒருத்தர். தனியா இருந்தாரு. அவர் மக முடிச்சூர்ல இருந்தா. எப்பவாவது வருவா. ஒருநாள் சாயங்காலம் உடம்பு சரியில்லன்னு மகளுக்குப் ஃபோன் பண்ணியிருக்கார். காலைல அவ வந்து பாத்தப்போ பெட்ரூம்ல செத்துக்கிடந்தாரு. கதவு திறந்துதான் இருந்தது. டிவி ஓடிக்கிட்டிருந்தது. ஹார்ட் அட்டாக்கு. பாவம். அதுக்கப்புறம் இது பூட்டியே கிடக்குது.”

ஃபோன் அடித்தது. சுந்தரம் எடுத்துப் பார்த்தார். மறுபடி பத்மா. ஆனால் அவர் எடுக்கவில்லை. மணியைப் பார்த்தார். மதியம் ஒண்ணேமுக்கால் ஆகியிருந்தது. சாப்பிடுவதற்கு ஞாபகப்படுத்துகிறாள். லேசாய்ப் பசிக்கிற மாதிரியும் இருந்தது. சாப்பிடுவதற்கு இன்றைக்குத் தாமதமாகிவிடும் என்று தோன்றியது. இப்பொழுது ஒரு டீயாவது குடிக்காவிட்டால் லோ சுகர் ஏற்படும் அபாயம் இருக்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

படுக்கையறை ஏசி ஓடுமா என்று சோதனை செய்துகொண்டிருந்தவனிடம் ”ஹஸ்பண்ட் ஒயிஃப் ரெண்டு பேருக்கு சரியா இருக்கும். உங்களுக்குக் குடுத்துட்டா அப்றம் நான் இந்தப்பக்கம் எட்டிக்கூட பாக்கமாட்டேன். இது உங்க வீடு மாதிரி நினைச்சுக்கலாம். வாடகை எனக்கு ஆன்லைன்லயே ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடலாம். எனக்கு இங்க வர்ரவங்க புள்ள குட்டிகளோட சந்தோஷமா இருக்கணும். எனக்கு ரெண்டு பசங்களும் இங்கதான் பொறந்தாங்க. ரெண்டு பேருக்கும் இந்த வீட்லதான் கல்யாணமாச்சு. கார் வாங்கினதும் இங்கதான். ப்ராஸ்பரிட்டிக்கு குறைச்சலேயில்லை. ராசியான வீடு. எனக்கென்னமோ உங்களுக்கே குடுக்கணும்னு மனசுல படுது. நீங்க யோசிச்சுச் சொல்லுங்க தம்பி.”

நீலச்சட்டை உடனடியாக எதையும் தீர்மானிக்க முடியாமல் கொஞ்சம் தயக்கமாக இருந்தான். க்ரவுண்ட் ஃப்ளோர், பழைய டைப் வீடு, அறைகள் சிறியன. கரப்பான்பூச்சிகள் வரலாம், மழைக்காலத்தில் ட்ரெய்னேஜ் ரிவர்ஸில் வந்து வீட்டுக்குள் நிறைந்துவிட சான்ஸ் உண்டு. இந்த மாதிரி நிறைய யோசித்துக்கொண்டிருந்தான். இந்த வீட்டுக்கு பதினோராயிரம் கொஞ்சம் அதிகம்தான் என்று தோன்றியது.

சுந்தரத்தின் மொபைல் ஃபோன் மறுபடி ஒலித்தது. எடுத்துப் பேசினார். இன்னொருவர் போலும். ‘வாங்க, இருக்கேன்’ என்று சொல்லிவிட்டு வைத்தார்.

”இன்னொரு பார்ட்டி வர்ராங்க..” என்றார் நீலச்சட்டையிடம். உடனே முடிவு சொல்லாவிட்டால் வீடு வேறு யாருக்காவது போய்விடும் என்கிற தொனியிருந்தது அவர் குரலில்.

”வீட்ல யாரையாவது கூட்டிட்டு வந்து பாக்கச் சொல்றேன் சார்.” என்றான்.

சுந்தரம் லேசாய் ஏமாற்றமடைந்தார். அவனை அசுவாரஸ்யமாகப் பார்த்து சரி என்பது மாதிரி தலையாட்டினார். மறுபடி மணி பார்த்தார். தரையைப் பார்த்துக்கொண்டே யோசித்தார். திறந்திருந்த ஹால் ஜன்னலை இழுத்து மூடினார்.

”தம்பி! எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா? வண்டிலதானே வந்தீங்க. எனக்கு ஒரு டீ சாப்பிடணும். இல்லேன்னா கொஞ்சம் லோ சுகர் ஆயிரும். அழைச்சிட்டுப் போக முடியுமா? இஃப் யு டோண்ட் மைண்ட். ஒண்ணும் தொந்தரவில்லையே.. அடுத்த பார்ட்டி வர்ரதுக்குள்ள திரும்பி வந்துரலாம்.” என்றார்.

“ஒண்ணும் ப்ரச்சனையில்ல சார்.. வாங்க..” என்று பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்துக்கொண்டு வாசலைப் பார்த்து நடப்பதற்குள் வாசலில் அவர்கள் வந்து இறங்கினார்கள். சற்றுமுன் ஃபோனில் கூப்பிட்டவர்கள். கணவன் மனைவியைப் போல இருந்தார்கள். வேறு வழியில்லாமல் சுந்தரம் வந்தவர்களுடன் மறுபடி வீட்டுக்குள் போனார்.

அறைகளைச் சுற்றிக் காண்பிக்கும் படலம் மறுபடி அரங்கேறியது. கேள்விகள், சந்தேகங்கள், பதில்கள். ‘கிச்சன் ரொம்பக் குட்டியா இருக்கு’ என்றாள் அந்தப் பெண். ‘கரண்டு பில் மீட்டர்தானே’ என்றான் அந்த ஆள். ‘சாமி செல்ஃப் எதும் இல்லையா’ என்றாள் அந்தப் பெண். ‘இன்னொரு பெட்ரூமுக்கு ஏஸி ப்ரொவிஷன் இருக்கா’ என்றான் அந்த ஆள்.

அவர்கள் கேள்விகேட்ட தொனியும், முக பாவங்களும், நடந்து கொண்ட விதமும் சுந்தரத்துக்கு ஏனோ பிடிக்கவில்லை. இவர்கள் ஓக்கே என்று சொன்னாலும் கொடுக்கக்கூடாது என்று ஒரே விநாடியில் தீர்மானித்துக்கொண்டார். அவர்களும் அசுவாரஸ்யமாக “ஓக்கே சார். தேங்க்ஸ். யோசிச்சிட்டு கால் பண்றோம்.” என்று உடனே கிளம்பிவிட்டார்கள்.

சுந்தரம் நீலச் சட்டையைத் தேடினார். வாசலுக்கு வந்து பார்த்தார் அவனையும் அவன் பைக்கையும் காணவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டான். அவனுக்கு என்ன அவசரமோ என்று நினைத்தார். லேசான ஏமாற்றமும் ஆயாசமும் கவிய யோசனையாய் மீண்டும் வீட்டுக்குள்ளே வந்தார். இன்றைக்கே முடிந்துவிட்டால் உத்தமம் என்றுதான் நினைத்தார். இன்னும் சில பேர் அழைக்கலாம். யாராவது அட்வான்ஸ் கொடுத்தால் மேற்கொண்டு வேலைகளைப் பார்க்கலாம். மொபைலை எடுத்து காலையிலிருந்து எத்தனை அழைப்புகள் வந்தன என்று எண்ணினார். பத்மா அழைத்தது போக பதினான்கு.

சுந்தரம் திறந்திருந்த எல்லா ஜன்னல்களையும் மூடத் தொடங்கினார். டீக்கடைக்கு நடந்து போய்விட்டு வரலாம் என்று முடிவு செய்தார்.

‘சார்..’ என்று குரல் கேட்டது. குரலைத் தொடர்ந்து நீலச்சட்டை உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததும் அவர் கண்கள் விரிந்தன. “வாங்க தம்பி. நீங்க கிளம்பிட்டீங்கன்னு நினைச்சேன்”

’இல்ல சார்.. உங்களுக்காக பிஸ்கெட் வாங்கிட்டு வரப் போனேன்..” என்று சிரித்தபடி கையில் இருந்த ஒரு பாலிதீன் கவரை நீட்டினான்.

சுந்தரம் பதறிவிட்டார். “ஐயய்யோ.. இதெல்லாம் எதுக்கு தம்பி..”

“இல்ல சார்.. எடுத்துக்குங்க. நாம கிளம்பறதுக்குள்ள யாரோ வந்துட்டாங்க.. லேட் ஆகும்னு தோணுச்சு. அதான் நானே போய் வாங்கிட்டு வந்தேன். சும்மா ரெண்டு பிஸ்கெட் சாப்பிடுங்க. லோ சுகர்னு சொன்னீங்க..” என்று பிஸ்கெட் பாக்கெட்களை எடுத்து நாற்காலியின் மேல் வைத்தான்.

“உங்களுக்கு வீணா கஷ்டம்.”. சுந்தரத்துக்கு மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ரொம்ப தேங்க்ஸ்” என்றார்.

நீலச்சட்டை நின்ற இடத்திலிருந்தே ஒரு தடவை வீட்டைப் பார்வையாலேயே மறுபடி அளந்தான். வீட்டைப்பற்றி அவன் ஏதாவது முடிவு செய்தானா என்று கேட்க நினைத்தார். ஆனால் கேட்கவில்லை. ’வர்ரேன் சார்.. நைஸ் டு மீட் யூ” என்று சொல்லிவிட்டு சட்டென்று விடைபெற்றுக் கிளம்பிவிட்டான் அவன்.

சுந்தரம் நாற்காலியின் மேலிருந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தார். அதில் ஒரு பாக்கெட்டின் மேல் “Good day” என்று எழுதியிருந்ததைப் பார்த்தார். ஏரிக்கரை ராமகிருஷ்ணன் நினைவுக்கு வந்தார். லேசாய் புன்னகைத்துக் கொண்டார்.

********

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s