தூரப்பார்வை

சிறுகதை – கல்கி – மார்ச் 2, 2014

சுரிதார் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு பெண் தீவிரவாதியைப் போல நின்றுகொண்டிருந்தாள் பரிமளா. பஸ்ஸூக்கு காத்திருக்கும் ஏராளமான கூட்டத்திற்கு நடுவே அவளும் பொறுமையின்றி காத்துக்கொண்டிருந்தாள். லேசாக இருட்டத் தொடங்கிவிட்டது. விரைந்து கடக்கும் வாகனங்கள் இடைவிடாது சாலைப் புழுதியை நின்று கொண்டிருந்த கூட்டத்தின் மேல் இடமாற்றம் செய்துவிட்டுச் சென்றன. பஸ்கள், லாரிகள், கால் டாக்ஸிகள். ஷேர் ஆட்டோக்கள். டூவீலர்கள். காதைக் கிழிக்கும் ஹார்ன் ஒலிகள்.

அனிஷா வீட்டில் தனியாய் இருப்பாள். அனிஷா ஸ்கூல் விட்டு வந்தபிறகு ஒழுங்காக சாப்பிட்டிருப்பாளா? அவளுக்கு நாளைக்கு பரீட்சை தொடங்குகிறது. இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? படிக்க உட்கார்ந்திருப்பாளா? இல்லை பக்கத்து வீட்டுக்குப் போய் வாயடித்துக் கொண்டிருப்பாளா? அனிஷாவைப் பற்றி வரிசையாய் யோசிக்க ஆரம்பித்ததும் ஒரு பரபரப்பு வந்து பரிமளாவின் மேல் கவிந்தது. அடுத்த பஸ் சீக்கிரமாக வந்து தொலைத்தால் தேவலை.

கூடவே சட்டென்று தொற்றிக்கொண்ட இயலாமை உணர்வு மற்றும் எரிச்சல்களோடு பரிமளா வாட்ச்சைப் பார்த்தாள். அது நின்று போயிருந்தது. பேட்டரி மாற்ற வேண்டும். ஆஃபிஸிலிருந்து இன்றைக்குக் கிளம்பும்போதே லேட் ஆகிவிட்டது. அந்த மேனேஜர் தடியன் கடைசி நேரத்தில் வந்து வெண்டாருக்கு ஒரு அர்ஜெண்ட் மெயில் அனுப்பவேண்டும் என்று சொல்லாமலிருந்திருந்தால் கொஞ்சம் நேரத்தோடு கிளம்பியிருக்கலாம். இந்நேரம் வீட்டுக்குப் போய் சேர்ந்தும் இருக்கலாம்.

ஏற்கெனவே அடைத்துக்கொண்டு வந்து நிற்கிற பஸ்களில் எப்படியோ ஏறி உட்புகுந்து அடைந்து கொண்ட ஜனங்களைப் பார்த்தாள். அவள் போக வேண்டிய இரண்டு மூன்று பஸ்கள் கூட இப்படித்தான் வந்தது. கூட்டமாயில்லாததாய் வரட்டும் என்று அவைகளை போகவிட்டுத்தான் நின்று கொண்டிருந்தாள்.

நெரிசல்களுக்குள் இலகுவாய் புகுந்து புறப்படும் சாகச டூவீலர்களை பரிமளா சிறிது நேரம் வேடிக்கை பார்த்தாள். எத்தனை வேகம்! எத்தனை பரபரப்பு! எப்படியாவது ஒரு பழைய ஸ்கூட்டியாவது வாங்கிவிட முடிந்தால் பஸ்ஸூக்குக் காத்திருக்கிற இந்த அவஸ்தைகளிலிருந்து தப்பிக்கலாம். அதற்கான வேளை வரவேண்டும். அப்போதுதான் அவள் அவர்களைப் பார்த்தாள். ஒரு பல்ஸர் பைக். அதன் மேல் ஒரு இளஞ்ஜோடி. நிச்சயம் கல்லூரியில் படிக்கிறவர்களாகத்தான் இருக்கும் என்று நினைத்தாள். பின்னிருக்கையில் இருந்த அந்தப்பெண் பரிமளாவை மாதிரியே துப்பட்டாவால் முகத்தை மூடியிருந்தாள். பல்ஸர் பையனின் தோளைப் பிடித்தபடி அவன் மேல் பல்லிபோல் ஒட்டிக்கொண்டிருந்தாள். ட்ராஃபிக் இயக்கத்தில் சற்றுத் தயங்கி நின்று பின் பரிமளாவின் பக்கத்தில் கிடைத்த இடைவெளியில் கடந்து போனது பல்ஸர்.

அவர்களைப் பார்த்ததும் பரிமளாவுக்கு ஏற்கெனவே இருந்த எரிச்சலின் அளவு காரணமில்லாமல் இரண்டு டிகிரி கூடியது. ‘இதுகள் எல்லாம் கண்டிப்பாக வீட்டுக்குத் தெரியாமல் காதல் என்கிற பெயரில் ஊர் சுற்றுகிற கழுதைகளாகத்தான் இருக்கும்’ என்று நினைத்துக்கொண்டாள். பிறகு திரும்பி பஸ் வருகிறதா என்று தூரத்தில் வெறித்தாள்.

பல்சர் பெண் அவனை இன்னும் சற்று உரிமையாய் நெருக்கி உட்கார்ந்து கொண்டு “மொத மாச சம்பளத்துல ட்ரீட் குடுக்க முடியலடா.. ஸாரி…” என்றாள் அவன் காதுக்குள்.

”ச்சேச்சே.. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத நீ. உன் கஷ்டம் எனக்கு புரியாதா..” என்றான் அவன் சற்றே திரும்பி. தோளில் விழுந்திருந்த அவள் கையை வாஞ்சையாய்த் தொட்டான். அந்தத் தொடுகை உணர்த்திய குறிப்புகளை அவள் உள்வாங்கிக்கொண்டு அவன் முதுகில் சாய்ந்தாள். ஏனோ அவள் கண்கள் லேசாகப் பனித்தன.

”அடுத்த லெஃப்ட்ல போய்.. செகண்ட் ரைட் திரும்பு.. அங்க ரைட் சைடு நாலாவது வீடு. திலகம்மை இல்லம்ன்னு போட்டிருக்கும்”

அவள் சொன்ன திசைகளில் அவன் வண்டியைச் செலுத்தி அந்த வீட்டின் முன் நிறுத்தினான். பெரிய கேட் வைத்த காம்பவுண்டுக்குள் ஒரு இன்னோவா நின்றிருந்தது. வீட்டின் நிலைக் கதவு அகலத் திறந்திருந்தது. கேட்டைத் திறந்து உள்ளே சென்று ’அண்ணாச்சி’ என்று குரல் கொடுத்தாள். சில விநாடிகளில் ’யாரு?’ என்று கேட்டபடியே ஒருவர் வெளிப்பட்டார். நடிகர் மணிவண்ணன் சாயலில் இருந்தார். நெற்றியில் பட்டை, அவர் சட்டை எல்லாமே வெள்ளை நிறத்தில் மிளிர்ந்தது. அவளையும் அவளருகே நின்றிருந்த அவனையும் பார்த்ததும் தெரிந்துகொண்டு ’வாம்மா..’ என்றார்.

”இல்லைங்க அண்ணாச்சி.. லேட் ஆயிருச்சு.. பணம் குடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்.” ஹாண்ட் பேகிலிருந்து ஒரு கவரை எடுத்து அவரிடம் கொடுத்தாள். “ஏதோ இப்போதைக்கு இதுதான் முடிஞ்சது.” என்றாள். வார்த்தைகள் சன்னமாகத்தான் வந்தன.

“நல்லதும்மா..” என்று சொல்லிவிட்டு அண்ணாச்சி கவரிலிருந்து பணத்தை எடுத்து சரக் சரக் என்று ஓசையுடன் எண்ணிப்பார்த்துவிட்டு பாக்கெட்டில் வைத்தார். ஏமாற்றத்தை வெளியே காண்பிக்க விரும்பாதவர் மாதிரி முகத்தை இறுக்கிக்கொண்டு சொன்னார்.

“அப்பன் வாங்கின கடன அடைக்க புள்ள பாடுபடுது.. அந்தாளோ குடிச்சே சீரழியறான். சீக்கிரம் முழுப்பணத்தையும் எப்படியாவது வட்டியோட செட்டில் பண்ணிரும்மா.. காப்பி கீப்பி சாப்டறீங்களா?”

”பரவால்ல அண்ணாச்சி.. கிளம்பறோம்..”

அவரிடம் விடைபெற்றுவிட்டு வெளியே வந்து கிளம்பும்போது அவன் மெதுவாகச் சொன்னான். “க்ரீடி பீப்பிள்… இவனுக கிட்டே எவ்ளோ காசு கொட்டிக்கிடந்தாலும் நயா பைசா வுட்டுத்தரமாட்டானுங்க..”

“இன்னும் அறுபத்தி நாலாயிரம் ரூபா பாக்கியிருக்கு..” என்றாள் அவள் கவலையோடு.

அவர்கள் கிளம்பிப் போனபிறகு அண்ணாச்சி ஃபோர்டிகோவில் நின்றிருந்த அவருடைய காரை ஏறிட்டுப் பார்த்தார். பின்னர் வாஞ்சையாய் தொட்டுப் பார்த்தார். அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. அடுத்த வாரம் அதை விற்பதற்குப் பேசி முடித்தாயிற்று.

 உள்ளே அவர் மனைவி படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். மூளையில் கட்டி. கூடவே சிறுநீரக பாதிப்பு வேறு. கிரிட்டிக்கல் கேஸ் என்று சொல்லிவிட்டார்கள். ஆபரேஷன் உட்பட இதுவரைக்கும் ஆன மருத்துவச்செலவுகள் கிட்டத்தட்ட நாற்பது லகரத்தைத் தாண்டிவிட்டது. அரக்கோணம் நிலத்தை விற்றுவிட்டார். அடுத்தவாரம் காரும் போய்விடும். மேலும் தொழில் நஷ்டம். போன வருடம் நடந்த மகளின் கல்யாணத்துக்கு செலவான பெருந்தொகை எல்லாம் சேர்ந்து அவரது கையிருப்பைக் காலி செய்து கொண்டிருந்தது. இப்படியே போனால் ஒன்றும் மிஞ்சாது என்பதும் அவருக்குப் புரிந்தே இருந்தது. ஆனால் திலகம்மைக்காக கடைசிக் காலணா வரைக்கும் இழக்கவும் அவர் தயாராகவே இருந்தார்.

பழைய மாதிரி நிலைமை இருந்திருந்தால் இந்தப் பெண்ணிடம் கை நீட்டி காசு வாங்க வேண்டியிருந்திருக்காது. அவசரமில்லை. மெதுவாகக் கொடுத்தால் போதும் என்று சொல்லியிருப்பார் அண்ணாச்சி. அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஆனால் என்ன செய்வது? இப்போதிருக்கிற நிலைமை மிக மோசம்.

கிடைக்கிற இடத்திலெல்லாம் பணத்தைப் புரட்டுவதும் உருட்டுவதுமாக இருந்தார் அண்ணாச்சி. இன்னும் நிறைய பணம் தேவைப்படுகிறது. ஸோஃபாவில் அமர்ந்து ஃபேனைப் வெறித்துக்கொண்டு யோசித்தார். பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து மறுமுறை எண்ணிப் பார்த்தார். இந்த சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது.

மாணிக்கத்திடமிருந்து அவருக்கு வரவேண்டிய மூன்று லட்சம் உடனே கிடைத்தால் இன்னும் தாக்குப்பிடிக்கலாம் என்று தோன்றியது. இது தோன்றிய மறுகணமே மொபைலை எடுத்து மாணிக்கத்தின் எண்ணை ஒத்திவிட்டுக் காதில் வைத்தார். இரண்டு மூன்று முறை இணைப்பு துண்டிக்கப்பட்டு.. மீண்டும் மீண்டும் முயற்சித்தபோது ஒரு பெண்குரல் கேட்டது.

“அவர் இல்லைங்க.. வெளிய போயிருக்காரு” தயக்கக் குழைவுடன் மறுமுனை ஒலித்தது. மாணிக்கத்தின் மனைவியாக இருக்கவேண்டும் என்று யூகித்துக்கொண்டார்.

அண்ணாச்சி சலிப்பாய் புருவங்களை சுருக்கினார். கொஞ்சம் அதிருப்தியுடன் ”எப்ப வருவாரு?” என்றார்.

”வந்துருவாருங்க.. வந்ததும் கூப்பிடச்சொல்றேன்..”

அழைப்பைக் கட் செய்துவிட்டு. ’எப்பப் பாத்தாலும் வீட்டுக்குள்ள இருந்துகிட்டே இல்லைன்னு சொல்றதே இவனுக்குப் பொழப்பாப் போச்சு.. களவாணிப்பயலுக.” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார். அவருக்கு ஆத்திரமாக வந்தது. அப்படியே ஸோஃபாவில் சாய்ந்து கண்களை மூடினார்.

மாணிக்கத்தின் மனைவி ஃபோனை படுக்கையின் மேல் வீசிவிட்டு சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு லேசாய் விசும்ப ஆரம்பித்தாள்.

அவர் வீட்டில் இல்லையென்று சொன்னதை அண்ணாச்சி நம்பவில்லை. அவர் குரல் காட்டிக்கொடுத்துவிட்டது.

‘வெளியே போயிருக்காரு.. வந்துருவாருங்க’ என்றுதான் போனில் கேட்கிற எல்லோரிடமும் மூன்று நாட்களாய் சொல்லிக்கொண்டிருக்கிறாள். பின்னே போலீஸ் லாக் அப்பில் இருக்கிறார் என்று உண்மையையா சொல்ல முடியும்? இப்போதே பக்கத்து வீடுகளுக்கெல்லாம் செய்தி பரவிவிட்டது. ஆஃபிஸில் திருடு போன இரண்டு லட்சத்தை இவர்தான் எடுத்திருப்பார் என்று யாரோ கொடுத்த கம்ப்ளெய்ண்டில் இவரை அரெஸ்ட் பண்ணி உள்ளே வைத்திருக்கிறார்கள். இவருக்கு எதிராய் ஒரு சாட்சியம் வேறு இருக்கிறது. நிச்சயமாக இவர் அப்படியெல்லாம் பண்ணுகிற ஆள் இல்லை. போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. துரைசாமியண்ணன் அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவர முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார். காலையில்கூட ஸ்டேஷனுக்குப் போய் இரண்டு மணி நேரம் நின்றுவிட்டு வந்தார்கள். அவள் ஒழுங்காகத் தூங்கி மூன்று நாட்கள் ஆயிற்று. அவர் சீக்கிரம் வெளியே வந்தால் மாங்காடு அம்மனுக்கு அங்கப் பிரதட்சணம் செய்வதாய் வேண்டிக்கொண்டிருக்கிறாள்.

வாசலில் நிழலாடுவதை உணர்ந்து முகத்தை நிமிர்த்தினாள். அந்தச் சிறுமி நின்றிருந்தாள். கையில் ஒரு மாங்காய்த் துண்டு. அதைக் கடித்துக்கொண்டே உள்ளே வந்தாள். மாணிக்கத்தின் மனைவி அவசரமாய் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.

“என்ன ஆண்ட்டி.. அங்கிளை போலீஸ் புடிச்சுட்டுப் போயிருச்சாமா? நிஜமாவா?” என்றாள்.

அவள் லேசாக அதிர்ந்தாள். சின்னப்பிள்ளைகள் வரை சேதி பரவிவிட்டது. சட்டென்று கோபம் மண்டையின் உச்சிக்கு ஏறியது.

‘அடி செருப்பால.. நாயே.. உனக்கெதுக்குடி அதெல்லாம்… யார்ரீ சொன்னா?” என்று ஆவேசமாகக் கத்தினாள்.

”எதுத்த வீட்ல பேசிட்டிருந்தாங்க ஆண்ட்டி”

”அதிகப்பிரசங்கித்தனமா பேசிட்டிருக்காத.. போ… போய் படிக்கிற வேலயப் பாரு…”

ஏன் அவள் கத்துகிறாள் என்று புரியாமல் பயந்து போய் நகர முற்பட்ட சிறுமியிடம் “உங்கம்மா இன்னும் ஆபிஸ்லயிருந்து வல்லியாடி” என்று நக்கல் தோய்ந்த வார்த்தைகளால் கேட்டாள்.

“இன்னும் இல்ல ஆண்ட்டி..” என்றாள்.

‘என் புருஷனாவது ஜெயில்ல கெடக்கிறான்..  பணத்த இவர் எடுக்கலன்னு நிரூபணம் ஆச்சுன்னா வெளிய வந்துருவார். ஆனா இவ அப்பன் ஓடிப்போய் ஆறு மாசமாச்சு.. இனி திரும்புவானோ.. மாட்டோனோன்னு இருக்கு.. இவ அம்மா வேலைக்குப் போறேன்னுட்டு எங்க ஊர் மேயறாளோ..’ என்று முணுமுணுத்தாள். அப்படி நினைத்துக்கொண்டதில் அவளது துக்கம் லேசாய் மட்டுப்பட்டமாதிரி இருந்தது.

”ஆண்ட்டி.. ரொம்ப லேட்டாச்சு.. அம்மாவ இன்னும் காணோம். ஒரு ஃபோன் பண்ணிக்கட்டுமா..” அப்பாவியான முகத்துடன் கெஞ்சுகிற தொனியில் கேட்டாள்.

மாணிக்கத்தின் மனைவி ஒரு விநாடி அவளை முறைப்பாய் ஏறிட்டுவிட்டு கட்டிலின் மேல் வீசப்பட்டுக் கிடந்த மொபைலை எடுத்து சிறுமியிடம் வேண்டா வெறுப்பாய் கொடுத்தாள். ”இதே பொழப்பாப் போச்சு.. இந்தா.. கைய தொடச்சிட்டு வாங்கு..”

அனிஷா தன் மாங்காய்க் கையை பாவாடையில் துடைத்துவிட்டு ஃபோனை வாங்கி டயல் செய்தாள். இன்னும் பஸ் ஸ்டாப்பில் நாள் முழுக்க அலுவலகத்தில் வேலை செய்த களைப்புடன் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தபடி சலிப்புடன் நின்றுகொண்டிந்த பரிமளா ஃபோன் அடிப்பதை உணர்ந்து அதை கைப்பையிலிருந்து எடுத்து ஒளிர்கிற திரையில் பெயர் பார்த்து அவசரமாய் காதில் வைத்தாள்.

மறுமுனையில் அனிஷாவின் ”எப்பம்மா வருவ?”

தூரத்தில் அவள் போக வேண்டிய பஸ்ஸின் நம்பர் தெரிந்தது. ”ஒன்னவர்ல வந்துர்ரண்டி. நீ படிச்சிட்டிரு.. பஸ் வருது… ஃபோனை வை…”

அழைப்பைத் துண்டித்துவிட்டு வந்து நின்ற பஸ்ஸில் ஏறப்போனாள் பரிமளா.

***

Advertisements

2 thoughts on “தூரப்பார்வை

  1. பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. அவரவருக்கு அவரவர் பிரச்சனை. ஆனால்தனக்குமட்டும் தான் என்ற எண்ணம் மட்டும் எல்லோருக்கும்.கதை நன்று. வாழ்த்துக்கள். பல நாட்களுக்குப்பின் உங்கள் இடுகை காண்கிறேன். என் தளத்தில் காதல் போயின் என்னும்கதையில் பாதி எழுதி மீத்யை வாசகர்கள் முடிக்க வேண்டி இருக்கிறேன். உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.

    • @g.m balasubaramaiam: கதையை படித்து விமர்ச்சித்ததற்கு மிக்க நன்றி ஸார். உங்கள் தளத்தில் அந்தக் கதையை நிச்சயம் படிக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s