தொடர்பு எல்லைக்கு வெளியே

சிறுகதை

இன்னும் ஒரு தெரு திரும்பினால் குழந்தையைப் பார்த்துவிடலாம். ஆனால் ஏதோ தயக்கம், லேசான பயம் எல்லாம் சேர்ந்து கால்கள் தானாக ப்ரேக்கை அழுத்தி நிறுத்தின. பைக்கை ஓரமாக நிறுத்தினான். அவசரப்படவேண்டாம். யோசிக்காமல் எதையாவது செய்தால் பிறகு அவமானம் மட்டுமே மிஞ்சும். ராஜூவை மறுபடி ஃபோனில் கூப்பிட்டு என்ன செய்வது என்று கேட்கலாமா என்று யோசித்தான். சட்டென்று சூழ்நிலைக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவதில் அவன் கில்லாடி.

ராஜூவின் நம்பரை முயற்சித்தபோது ‘தற்போது தொடர்பு கொள்ளமுடியாத நிலையில்’ இருப்பதாக குரல் சொன்னது. மறுபடியும் யோசித்தான். இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? என் குழந்தையைத்தானே பார்க்கப் போகிறேன்?. திமிர் பிடித்த வித்யாவையோ வரட்டு கௌரவம் கொண்ட அவளது பெற்றோர்களையோ இல்லையே? அதில்லாமல் குழந்தையைப் பார்ப்பதற்கும் கொஞ்சுவதற்கும் தனக்கில்லாத உரிமையா?

தயக்கத்தை உதறிவிட்டு பைக்கைக் கிளப்பினான். மனது தெளிவாய் இருந்தது இப்போது. இரண்டே நிமிடங்களில் வித்யாவின் வீட்டை அடைந்தான்.

கதவு திறந்திருந்தது. ஆனால் உள்ளே யாரும் தென்படவில்லை. காலிங்பெல்லை ஒரு தடவை அழுத்திவிட்டு நின்றான். சொந்தப் பெண்டாட்டியின் வீட்டிற்குள் அந்நியன் மாதிரி காலிங்பெல்லை எல்லாம் அடித்துவிட்டுக் காத்திருக்கிற அபத்தம் உறைத்தது. எல்லாம் வித்யாவின் அப்பாவால்தான்.

முன்னறையில் நிழலாடியது. யாரோ எட்டிப்பார்த்தார்கள். வித்யாதான். ஷங்கரை அங்கே திடீரென்று எதிர்பார்க்காத அதிர்ச்சியை ஒரு விநாடி முகத்தில் காட்டிவிட்டு சட்டென்று சமையலறைக்குள் புகுந்தாள். தன் வருகைக்கு எந்த வரவேற்பும் கிடைக்காத சூழ்நிலையில் ஒரு கணம் அவன் லேசான அவமானமாக உணர்ந்தான். எதிர்பார்த்ததுதான் என்பதால் அதை பொருட்படுத்தாமல் அவன் பாட்டுக்கு உள்ளே சென்றான். என் குழந்தையை நான் வந்து பார்ப்பதற்கு எந்தவித அழைப்போ, வரவேற்போ எனக்குத் தேவையில்லை. நான் பாட்டுக்கு கொஞ்ச நேரம் அதனுடன் கொஞ்சி விளையாடிவிட்டுப் கிளம்பப் போகிறேன்.

வித்யா மறைந்து இப்போது அவள் அம்மா எட்டிப்பார்த்தார். விருந்தோம்பலுக்கும் ஊதாசீனப்படுத்தலுக்குமான ஒரு மனநிலையில் அவர் ஊசலாடிக் கொண்டிருக்கிறார் என்பதை நொடியில் புரிந்துகொண்டான். ‘வாங்க’என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தையை தொண்டையிலேயே தடுத்து விழுங்கிவிட்டு மெல்ல அவரும் சமையலறைக்குள் மறைந்தார். வறட்டு கௌரவம் வார்த்தைகளைத் தடுத்திருக்கும்.

ஷங்கர் யார் அனுமதியையும் எதிர்பார்க்காமல் பெட்ரூமிற்குள் நுழைந்தான். அவன் வருகையை உணர்ந்திருந்தார்ப்போல தொட்டிலுக்குள் பிஞ்சுப்பாதங்கள் நெளியத்தொடங்கியிருந்தன. அவன் முகம் மலர்ந்து ஒரு அபரிமிதமான சந்தோஷம் கிளம்பி உடலைச் சிலிர்க்க வைத்ததை உணர்ந்தான். பிறந்த நான்கு மாதங்களுக்குள் அப்பாவைப் விட்டு பிரிய வேண்டிய விதி இதற்கு ஏன் நேரவேண்டும்? இந்தப் பெரியவர்களின் ஈகோதான் எப்படியெல்லாம் விளையாடித் தொலைக்கிறது!

“அப்பா மாடில தூங்கிட்டிருக்காராம்மா?” வித்யாவின் குரல் அசரீரியாய் ஒலித்தது. அம்மாவிடம் கேட்பது போல் ஷங்கருக்கு சேதி சொல்லுகிற உத்தி. ’உங்கப்பன் தூங்கினா என்ன முழிச்சிட்டிருந்தா என்ன? எனக்கொண்ணும் பிரச்சினையில்லை..’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் ஷங்கர். விழித்துக்கொண்டிருந்த குழந்தையை தொட்டிலிலிருந்து எடுத்தான். அறைக்கு வெளியே லேசாய் எட்டிப்பார்த்தபோது வித்யாவின் அம்மா மாடிக்கு விரைவது தெரிந்தது. அவன் திடீரென்று வந்து நின்றதில் எல்லோருக்கும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். இருக்கட்டும். என்னை மட்டும் அன்றைக்கு அத்தனை பதறவைத்தார்களே.

தூக்கம் சரியாகத் தெளியாமல் ஷங்கரை மலங்க மலங்கப் பார்த்தது குழந்தை. சரியாக இரண்டு வாரங்கள் ஆயிற்று இதைப் பார்த்து. அதனை அப்படியே தொட்டிலோடு சேர்த்து மார்பில் அணைத்துக்கொண்டான். அவன் விழிகள் லேசாய்த் துளிர்த்தன. எதற்கு இத்தனை கஷ்டம் என்று நினைத்துக் கொண்டான். அன்றைக்கு நடந்த பிரச்சனைக்கு வித்யாவிடம் இப்போதே ஒரு வார்த்தை ஸாரி என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது பிரச்சனை. ஆனால் நான் எதற்கு வளைந்து கொடுக்கவேண்டும்? அவர்களாக வந்து முதலில் பேசும் வரை நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை. ஷங்கர் அதில் உறுதியாக இருந்தான்.

பிரச்சனையைக் கிளப்பியதே வித்யாவும் அவள் அப்பாவும் சேர்ந்துதான். இரண்டு வாரங்களுக்கு முன் அவர் ஷங்கரின் வீட்டுக்கு வந்து தேவையில்லாமல் வாக்குவாதத்தைக் கிளப்பிவிட்டு தூங்குகிற குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டு வித்யாவையும் கூட்டிக்கொண்டு புயல் போல் வெளியேறின காட்சி இன்னும் மனதிற்குள்ளேயே அழியாமல் நிற்கிறது. ஷங்கர் அதற்கு எதிர்வினையாற்றியிருந்தால் விஷயம் வேறு மாதிரி ஆகியிருக்கும். அன்றைக்கு என்னவோ தெரியவில்லை. எப்போதும் சட்டென்று எட்டிப்பார்க்கும் முன்கோபத்தை கட்டுப்படுத்தி எதுவும் பேசாமல் ஒருமாதிரி மோன நிலையில் இருந்துவிட்டான். ஆனால் வித்யாவின் அப்பா கொதிக்கிற கோபத்தில் காற்றில் விசிறியடித்த வார்த்தைகள் மட்டும் இன்னும் காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. “இனி ஜென்மத்துக்கும் நானும் என் பொண்ணும் உங்க வீட்டு வாசப்படிய மிதிக்கறதா இல்ல.”

அதற்கப்புறமும் மதியாதார் தலைவாசல் மிதித்து ஷங்கர் இங்கே வந்திருக்கிறான் என்றால் குழந்தைக்காகத்தான். வித்யா எடுத்தெறிந்து பேசிவிட்டுப் போனது கூட பெரிய வருத்தமாய் இருக்கவில்லை. தனிமையில் அடிக்கடி அவன் குழந்தையின் ஞாபகம் வரும்போது மனது பிசைவது தாங்க முடியாத இம்சையாக இருந்தது. அதுதான் கிளம்பி வந்துவிட்டான்.

வித்யாவிற்கும் ஷங்கரின் அம்மாவுக்கும் லேசாய் ஒத்துவரவில்லை. லேசாக என்ன நிறையவே ஒத்துவரவில்லை! அவன் அம்மா எதற்கெடுத்தாலும் சலித்துக்கொள்கிற ஒரு மனுஷிதான். எதைப் பற்றியாவது எப்போதும் லேசான புலம்பல் இல்லையென்றால் அம்மாவுக்கு விடியாது. வேண்டாத மருமகள் கை பட்டது, கால்பட்டது என அம்மாவின் குற்றப்பத்திரிக்கை லிஸ்ட் பெரிதாக இருந்தது. வித்யா நிதானமாய் உட்கார்ந்து யோசித்திருந்தால் ஷங்கரின் அம்மாவை எப்படிச் சமாளிப்பது என்கிற சூட்சுமம் பிடிபட்டிருக்கும். ஆனால் அவளுக்கு பிரச்சனைகளைத் தீர்ப்பதைவிட வளர்ப்பதிலேயே ஆர்வம் அதிகமாயிருந்ததை ஷங்கர் கொஞ்சம் தாமதமாகத்தான் உணர்ந்தான். அவன் தனது மாதச் சம்பளத்தை அப்படியே அப்பாவிடம் கொடுத்துவிட்டு அவ்வப்போது கொஞ்சமாய் செலவுக்கு வாங்கிக்கொள்வதையும் சுட்டிக்காட்டி குறைசொல்ல ஆரம்பித்தாள் அடிக்கடி.

“நாம தனியாப் போயிறலாங்க..” என்கிற வாக்கியம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவள் வாயிலிருந்து வந்து விழுந்தது. ஷங்கர் அவன் அப்பா அம்மாவைத் தனியாக விட்டுவிட்டு தனிக்குடித்தனம் வரத் தயாராயில்லை என்று திட்டவட்டமாய் அறிவித்துவிட்டான். புகைச்சல்களும் புலம்பல்களும் அதிகமாயின. வித்யா ஏதோ பெரிய பிரச்சனைக்குள் இருப்பது போன்ற தோற்றத்தை அவளது பிறந்த வீட்டில் உருவாக்க ஆரம்பித்தாள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் வித்யாவின் அண்ணன் ஒருவன் வந்து ‘என்ன மாப்ள ப்ரச்சன?’ என்று கேட்டபொழுதுதான் வித்யாவின் வீட்டில் தன்னையும் தன் குடும்பத்தைப் பற்றியும் இல்லாததும் பொல்லாததும் ஆக விவாதங்கள் நடப்பதை புரிந்துகொண்டான் ஷங்கர்.

வித்யா திடீரென்று சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் முரண்டு பிடிப்பதும் சண்டையிடுவதுமாக பல நாட்கள் கழிந்தன. ஷங்கருக்கு எரிச்சலின் சதவிகிதம் அதிகமாகிக்கொண்டே போனது. ஒரு நாள் அடுத்த வீட்டுக்கெல்லாம் கேட்கிறபடி காட்டுக் கத்தலாய்க் கத்தினான். சமீபத்தில் குழந்தை பெற்ற தளர்ந்த உடம்புடன் வித்யா விசும்பி அழுததை அவன் பொருட்படுத்தவில்லை. அவளிடமிருந்து விசும்பல்கள் கலந்த ரகசிய ஃபோன்கால்கள் பறக்க அவளின் அப்பா திடீர் விஜயம் செய்தார். ”என்ன நடக்குது இங்கே?” என்றார் அதிகாரமாய் குரலுயர்த்தி. வாக்குவாதங்கள். சண்டைகள். ‘இந்த குடும்பம் உனக்கு சரிவராது. குழந்தையை எடுத்துட்டு நீ கிளம்பும்மா..” என்றார்.

“தாராளமா கிளம்புங்க.. நான் நிம்மதியாயிருக்கேன் இனிமே..” என்று கையெடுத்து கும்பிட்டான் ஷங்கர். தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தொட்டிலிலிருந்து கோபமாக உருவி, அவளும் அவள் அப்பாவும் வெளியே போனார்கள். டாக்சியின் கதவு அறைந்து சாத்தப்படுகிற சப்தம் பலமாய்க் கேட்டது. ஷங்கர் அமைதியாய் உட்கார்ந்துவிட்டான்.

ராஜூவிடம் இதைப் பற்றியெல்லாம் சொல்லி ஆலோசனை கேட்டபோது “அட உங்க வீட்ல பெரிய ஸீரியலே ஓடுது போல. இரு எங்கம்மாவையும் சம்சாரத்தையும் அங்க அனுப்பி வெக்கறேன்..” என்றான் அட்டகாசமாக சிரித்தபடி. பிறகு ஸீரியஸாகி “கொஞ்ச நாள் எந்த தொடர்பும் இல்லாம ஃப்ரீயா வுடு. தானா எறங்கி வருவாங்க..”

இரண்டு வாரங்களாயிற்று. ஒன்றும் பெரிதாய் நடக்கவில்லை. இரண்டு தரப்பிலும் மௌனம். ஷங்கரின் கோபம் சற்றுத் தணிந்திருந்தது. அப்பாவும் அம்மாவும்கூட அவனிடம் எதுவும் கேட்காமல் வீட்டுக்குள் மௌனமாய் வலம் வந்து கொண்டிருந்தார்கள். பீரோவைத் திறக்கும்போது தென்படுகிற வித்யாவின் உடைகளும், அறையின் உத்தரத்திலிருந்து தொங்குகிற காலித் தொட்டிலும் வெறுமையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஒரேயடியாகப் போய்விட்டாளா? இனி வரவே மாட்டாளா? எதுவும் உத்தரவாதமாகத் தெரியவில்லை.

என்னதான் அவர்களுக்குப் பிரச்சனை என்று தெளிவாகவும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தோன்றியது. எப்போதாவது குழந்தையின் நினைப்பு அவஸ்தையை அதிகரிக்கும்போது மட்டும் அதைப் போய் பார்த்துவிட்டு வந்துவிடுவது என்று தீர்மானித்தான். யார் தடுத்தாலும் பரவாயில்லை.

இன்றைக்கு வித்யாவின் வீட்டுக்கு போனதும், குழந்தையைப் பார்த்ததும், அதன் பட்டு உடம்பை ஸ்பரிசித்து விளையாடியதும் அவனை பெருமளவில் ஆசுவாசப்படுத்தியிருந்தது.

முன்னறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தபோது வித்யாவின் அப்பா முண்டாசு பனியனுடன் மாடியிலிருந்து இறங்கி சமையலறைப்பக்கம் போவதைப் பார்த்தான். இவனுக்குக் கேட்காத விதத்தில் முணுமுணுப்புப் பேச்சுகள் காற்றில் மிதந்து வந்தன. அப்புறம் நின்றுவிட்டது. ஷங்கருக்கு கோபம் கோபமாய் வந்தது. மகளின் வாழ்க்கையைவிட சுயகவுரவம்தான் பெரிது என்று நினைக்கிற இந்த மனிதரை என்ன செய்வது?

அவனுக்கு அந்த வீட்டுக்குள் இருப்பது மிகுந்த அவஸ்தையாக இருந்தது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு மெதுவாக பெட்ரூமிலிருந்து வெளியே வந்தான். ஹாலில் வித்யாவின் அப்பா நியூஸ் பேப்பர் படிக்கிற பாவனையிலிருந்தார். இவன் நிழலை உணர்ந்ததும் கூடுதலாக பேப்பரை உயர்த்தி தன்னை மறைத்துக்கொள்வதாகப் பட்டது. ஷங்கர் பொருட்படுத்தாமல் வாசலுக்கு வந்தான்.

இருள் கவியத்தொடங்கி பறவைகள் கூடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. பக்கத்து மரத்திலிருந்து கிரீச் கிரீச் என்று பெரும் சப்தம். காம்பவுண்டுக்குள் கார் நிறுத்த போட்டிருந்த ஷெட்டின் அடியில் வந்து நின்றான். பெருகிப் புரண்ட பாசவெள்ளத்தில் குழந்தையை நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தான். சொல்லவொண்ணாத உணர்ச்சிகள் அவனைச் சூழ்ந்து நின்றிருந்தன. இன்னும் ஒரு ஐந்து நிமிடத்தில் இதை இங்கேயே விட்டுவிட்டுப் பிரிய வேண்டியிருக்கும் என்று நினைத்தான். இதற்கு இன்னும் பேர்கூட வைக்கவில்லை என்பது பெரிய உறுத்தலாய்க் குத்தியது.

“பனி பெய்யுது. குழந்தையோட வெளீல நிக்காதீங்க.”

கொஞ்சமும் ஸ்நேகம் கலக்காத தடித்த வார்த்தைகள் பின்னாலிருந்து கேட்டன. வித்யாவின் அப்பாவின் குரல். எகிறிய எரிச்சலில் சட்டென்று திரும்பினான் ஷங்கர். திரும்பின வேகத்தில் ஷெட்டின் ஓரத்தில் நீட்டிக்கொண்டிருந்த இரும்பில் ”ணங்” என்று தலை இடித்துக்கொண்டது. அவனையறியாமல் அம்மா என்று கத்திவிட்டான். தெறித்த வலியில் குழந்தையோடு கீழே அமர்ந்துவிட்டான்.

”அய்யோ..” கிளர்ந்த பதற்றத்தில் இரண்டு படிகளை ஒரே தாவலாகத் தாவி வித்யாவின் அப்பா அவனருகே வந்துவிட்டிருந்தார். ”என்னாச்சு” என்று குழந்தையை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டார். வலியின் உச்சத்தில் பதில் சொல்லக்கூட இயலாமல் நின்றான். அவன் கை பரபரவென்று தலையைத் தேய்த்துவிட்டுக்கொண்டது.

அவன் சங்கோஜமாக எழுந்துகொண்டான். திரும்பிப் பார்த்தபோது வாசற்படியில் வித்யாவும் அவள் அம்மாவும் நின்று இவனையே பதட்டத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கையிலிருந்த குழந்தையை ஒரு தடவை பார்த்தான். புன்னைகை மாதிரியான பாவத்தில் அதன் இதழ்கள் விரிந்து சுருங்கின.

“பலமான அடியா மாப்ள….” என்றார் வித்யாவின் அப்பா தன்னைத் தணித்துக்கொண்டு.

“இல்ல சின்ன அடிதான்” அதற்கப்புறம் அவன் அங்கே நிற்க விரும்பாமல் வேகமாய் வெளியே வந்து பைக்கைக் கிளப்பினான். திரும்பிப் பார்க்காமல் விரைந்தான். வித்யா ஒரு வாரத்திற்குள் திரும்பி வந்துவிடுவாள் என்றுதான் அவனுக்குத் தோன்றியது.

Advertisements

3 thoughts on “தொடர்பு எல்லைக்கு வெளியே

  1. On hindsight எது சரி எது தவறு என்று தெரியும். ஆனால் அதற்கு மூன் சம்பவங்கள் கைநழுவிப் போகக் கூடாது. வெகு நாட்களுக்குப் பின் பதிவைப் பார்க்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s