லிஃப்ட்

சத்யானந்த் அபார்ட்மெண்ட்டின் லிஃப்டுக்குள்தான் நான் மாட்டிக் கொண்டது. எல்லாம் ஒரு ஐந்தாயிரம் ரூபாயின் பொருட்டு. அதை என்னிடம் கடன் வாங்கியவன் அந்த அப்பார்மெண்ட்டின் நான்காவது மாடியில் இருந்தான். அருந்ததியின் குடும்ப வகையில் ஏதோ ஒரு தூரத்து உறவு அவன். இருந்தாலும் கொடுத்த பணத்தை வாங்காமல் விட்டுவிடுவதா என்று அவள் விவாதத்தை முன் வைத்துதான் இங்கு வந்ததே.

போகும்போது கீழ்த்தளத்தில் ஓரிருவர் லிஃப்ட் பொத்தானை அமுக்கிவிட்டுக் காத்திருக்க, நான் அதை உதாசீனம் செய்துவிட்டுப் படிவழியாகவே ஏறினேன். ஒவ்வொரு தளத்துக்கும் செல்லும் படிகளின் எண்ணிக்கையைச் சற்றுக் கூடுதலாகவே வைத்திருக்கிறார்களோ என்று தோன்றியது பிறகுதான். லேசாய் மூச்சிரைக்கவும், கால்கடுக்கவும் செய்ய, மூன்றாவது தளம் வருவதற்குள்ளாகவே மூன்று நாளாகிவிட்ட மாதிரி ஒரு ஆயாசம்.

நாலாவதில் அந்த ஆள் வீட்டிலேயே இருந்தான். நான் வருவது தெரிந்திருந்தால் பின் சாளரம் வழியாகக் கயிறுகட்டிக் குதித்தோடியிருப்பான். கதவு திறந்து எதிர்பாராமல் என்னைப் பார்த்தும் அதிர்வுகளையெல்லாம் அழித்து மறைத்துவிட்டு ‘வாங்க’ என்றான், ரொம்ப நாள் கழித்து வந்த விருந்தினரை வரவேற்பதைப் போல, நிர்பந்தமாய் தன் முகத்தை ஒளிரவிட்டுக் கொண்டான். காசு கொடுத்தவன் கொஞ்சிவிட்டுப் போக வரமாட்டான் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் இலங்கை வேந்தன் மாதிரி அவன் கலங்கியதாய்த் தொரியவில்லை.

“கலா, காப்பி கொண்டா…” என்றான்.

ஐய்யயோ! ஒரு காபி குடித்ததற்காக இன்னும் ஒரு மூன்று மாதத்துக்கு என்னுடைய பணத்தைத் திரும்பப் பெற அலைய வேண்டியதிருக்கும்.

“காபியெல்லாம் வேண்டாம். காசுதான் வேணும்.” கறாரில் முக்கியெடுத்த தடித்த குரல் என்னிடமிருந்து வெளிப்பட்டது. அப்புறம் கேள்விகள். பதில்கள். சமாதானங்கள். சமாளிப்புகள். பணக் கஷ்டம். மனக் கஷ்டம். ‘என் மேல் நம்பிக்கையில்லையா?’ என்றான் “மூன்று மாதங்களுக்கு முன் இருந்தது” என்றேன்.

சில மன்றாடல்களுக்குப் பிறகு புதன்கிழமை தருவதாக ஒப்புக் கொண்டான். புதன்கிழமை பணம் வராவிட்டால் நான் உன் வீட்டிலேயே வந்து குடியிருக்க நேரிடும் என்று மிரட்டிவிட்டு எழுந்தேன்.

எந்த புதன்கிழமை என்று கேட்காமல்விட்டு விட்டோம் என்று திரும்பும்போது தோன்றியது. அவனுடன் விவாதித்ததில் மிக்க களைப்பாகிவிட்டது. மிக நீண்டு இறங்கும் படிகளை நினைத்ததும் மேலும் களைப்பாகிவிட்டது.

காரிடார் காலியாய் இருந்தது. படிகளைப் புறக்கணிக்க முடிவு செய்து பொத்தானை அமுக்கினேன். ஒரு மகா முனகலுடன் லிஃப்ட் மேலேறி வந்து வாய் பிளந்து நின்றது.

நான் அதனுள் நுழையும்போது எதேச்சையாய் மணி பார்த்தேன். 8.59 P.M. உள்ளே வரிசையாய் இருந்த பொத்தான்களில் எழுத்துக்கள் அழிந்திருந்தன. நான் ஒருவிதமாய் அனுமானித்து ‘G’யை அமுக்கினேன். மறுபடி கதவுகள் சாத்திக் கொள்ள ஒரு பிரபஞ்சப் பயணம் மாதிரி ‘ம்ம்ம்’என்று அது கீழிறங்கியது. கீழிறங்குகிறதா அல்லது மேலே ஏறுகிறதா என்று ஒருகணம் குழப்பமாயிருந்தது. மேலே மின்னணுத் திரையில் 3 என்று எழுத்து தெரிகிறது. அப்படியெனில் இறங்குமுகம்தான். கவனித்துக் கொண்டிருக்கும்போதே அது 2 ஆக மாற, எதிர்பாராத ஒரு கணத்தில் ஒரு குலுங்கலுடன் லிஃப்ட் நின்றது.

தலைக்கு மேலே குண்டு பல்ப் சட்டென்று அணைய, திடீர் இருள். திரை மறைந்திருந்தது. மின்விசிறி வேகம் குறைந்து நிற்கப் போவதை கடக் கடக் என்ற சப்தம் உணர்த்தியது. இது என்ன? மின் தடையா? மின் வெட்டா? நான் எந்தத் தளத்திலிருக்கிறேன்? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? ஏதேனும் நிகழக் காத்திருப்பதா? உதவிக்கு யாரையாவது விளிப்பதா?

லிஃப்ட் அமைதி காத்தது. ஆட்டமில்லை, அசைவில்லை, பிரபஞ்சப் பேரமைதி. எதிர்பாராத இந்த நிகழ்வில் நான் உடல் பரபரத்து நின்றிருப்பதை சலனங்களற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது அது. தன் இந்தச் செய்கைக்கு எந்த விளக்கமும் தர அது தயாரில்லாமலிருந்தது.

இறந்தவருக்கு அஞ்சலி செய்பவன் மாதிரி ஒரு நிமிடம் மெளன அனுஷ்டிப்பில் நின்றேன். பதற்றப்படாமல் யோசிக்கலாம். இதிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன? அந்தரத்தில் மாட்டிக் கொண்டு விட்டேன் என்று இத்தனை நேரத்தில் நன்றாக புரிந்துவிட்ட பிறகு, வெறுமனே கால் மாற்றி நின்று கொண்டிருப்பதில் என்ன பயன்? இந்த லிஃப்ட் மறுபடி இதோ இப்போது தரையிறங்கிவிடும் என்ற என் எதிர்பார்ப்பிற்கு நான் நிர்ணயித்திருந்த கால அளவு தீர்த்து போனபின் இனி நான்தான் எதையாவது முயற்சிக்க வேண்டும் என்ற உணர்வு மீண்டது.

கையைத் திரும்பி கடிகாரத்தை உற்றுப் பார்த்தேன் ரேடியம் தொட்ட முட்களின் உபயம். 9.07. கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் ஆகிவிட்டது. நான் இதற்குள் அகப்பட்டுக்கொண்டு.

தடதடவென்று கதவைத் தட்டினேன். “ஹலோ…ஓ…ஓ…” என்று மூன்று நான்கு முறை கூவினேன். யாருக்காவது கேட்குமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. அதுவும் என் அபயக்குரல் எட்ட வேண்டிய திசை பற்றித் தீர்மானமில்லாமல் இருந்தது. மீண்டும் மீண்டும் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தேன்.

நதிமூலம் மாதிரி நெற்றியிலிருந்து வியர்வை கசியத்தொடங்கியது. குப்பென்று அறைக்குள் வெப்பம் தாக்கியது. புகைபிடிக்கலாமா என்று யோசித்தேன். காற்று வரவும் போகவும் வழியில்லாத இதற்குள் அது உசிதமல்ல. மேலும் ‘புகை பிடிக்காதீர்கள்’ அறிவிப்பை லிஃப்டுக்குள் பார்த்ததாகவும் ஞாபகம். ஆ! என்னிடம் தீப்பெட்டி இருக்கிறது. பாக்கெட்டிலிருந்து அதை எடுத்தேன். ஒரு குச்சி உரசி எழுந்த கந்தக நெடி மூக்கில் நுழைந்து சுவாசத் திணறலை ஏற்படுத்தியது. ஆடி அசைந்த வெளிச்சத்தில் எதற்கும் இருக்கட்டும் என்று எல்லாப் பொத்தான்களையும் ஒருமுறை தட்டிப் பார்த்தேன். உலகம் ஸ்தம்பித்து நின்றிருந்தது. தீக்குச்சி அணைந்து இருள் அவசரமாக அந்த அறை தனது என்பதுபோல் மறுபடியும் நிறைத்துக் கொண்டது.

மின்சாரம் போயிருந்தால் என்ன? ஜெனரேட்டர் இருக்க வேண்டுமே? அது ஏன் இன்னும் இயக்கப்படவில்லை? மறுபடி கதவை ‘தட்தட்’ என்று தட்டினேன். இந்த முறை பதிலுக்கு ஈனமான குரலொன்று கேட்டது. ஒரு குரல். இரு குரல். பல குரல்கள். நன்றி! நான் இந்தப் பொறிக்குள் ஒரு எலியைப் போல மாட்டிக் கொண்டிருப்பதை சக மனிதர்கள் எப்படியோ அறிந்துகொண்டு விட்டார்கள் என்று உறுதிப்பட்டு விட்டது. நான் நிச்சயம் காப்பாற்றப்பட்டு விடுவேன்.

பொங்கும் வியர்வையைத் துடைத்து ஈரமாகிவிட்டது கர்சீப். அப்படி இப்படியாக ஒரு அரை மணி நேரம் ஓடிவிட்டது என்ன ஆயிற்று இதற்கு? முழுசாய் இரையை விழுங்கிக் கொண்டு கிடக்கிற மலைப்பாம்பு மாதிரி அசையாமல் கிடக்கிறது. அதன் வயிற்றுக்குள் பாதி இறந்த நான். துருவப் பிரதேசப் பனிபோல என் இயக்கங்கள் உறைய ஆரம்பித்திருந்தன.

எப்படியாவது இதிலிருந்து விடுபடும்வரை ஹென்றி ஷாரியர் மாதிரி இதற்குள் நடந்து கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. வெறும் ஆறுக்கு நாலு அடி அளவில் இருக்கிற இந்தப் பெட்டிக்குள் இரண்டு எட்டு வைக்கக்கூட இடமில்லை. பிறகு அதை எப்படி நடத்தல் என்று சொல்ல முடியும்? ஆகவே, நான் நகர்ந்தேன். ஒரு நான்கு முறை இப்படியும் அப்படியுமாக. பட்டாம்பூச்சி நாவலில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட ஹென்றி ஷாரியர் இப்போது ஞாபகத்துக்கு வந்ததும் தவிர்க்க இயலாத எண்ணமாயிருந்தது. இரு வருடங்கள் ஒரு சிறு அறையில் அவன் எப்படித் தனித்துக் கழித்தான் என்று ஆச்சரியம் விரிந்து நின்றது. ஒரு நாள் இதற்குள் நான் இருந்தாலே மனச்சிதைவு அடைந்துவிடுவேன் என்று தோன்றியது.

எதற்காக இந்த நேரம் பார்த்து இந்த இடத்துக்கு வந்தேன்? கடன்காரனின் பொருட்டு. சிரமம் பார்க்காமல் வரும்போது படி வழியாகவே இறங்கியிருக்கலாம். இதற்குள் ஏறித் தொலைய நேரிட்டது எதனால்? கடந்து கொண்டிருக்கிற நேரம் நம்பிக்கையின் பிடியைத் தளர்த்திக் கொண்டிருந்தது. இன்று நான் கீழிறங்கி வீடு போய்ச் சேர்வேன் என்று தோன்றவில்லை. இத்தனை நேரமாகியும் காணோமே என்று அருந்ததி குழந்தையை மடியில் இருத்திக் கொண்டு வாசற்படியிலேயே கலவரமாய் காத்துக் கொண்டிருப்பாள். கம்பெனிக்கும் ரமேஷூக்கும் போன் செய்து கேட்டிருப்பான். ‘இங்கே வரலையே’ அல்லது அவர் அப்பவே கிளம்பிட்டாரே என்ற பதில்களில் அவள் பதற்றம் மேலும் கூடியிருக்கும்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலான என் வாழ்நாளின் உன்னதப் பொழுதை இந்த லிஃப்ட் களவாடிவிட்டது அநியாயமாகப்பட்டது. இந்த நேரத்தை எப்படி நான் வாழ்ந்ததாகக் கணக்கில் எடுத்துக் கொள்வது? இவ்வுலகின் கவனங்களிலிருந்து நான் தொலைந்து போய் விட்டானோ? ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளாரின் சிரத்தையோடு என்னை யாராவது கண்டெடுப்பார்களா?

மனத்திலும் உடலிலும் ஒரு போர்வையாகக் கவிந்து கொண்டது சோர்வு. ஏதேதோ எண்ணங்கள் கோர்வையற்றுத் தோன்றி மறைந்தன. நேரமாக ஆக கவலையின் கனம் அதிகரித்துக் கொண்டே போனது. கேட்கும் சிறுசிறு சப்தங்களைக் காது உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது. நிறைய சலசலப்புக் கேட்டது. அதல பாதளங்களைதத் தாண்டி மனிதர்கள் நடமாடுகிற வெளியில் என் குரல் கேட்டுவிட்டது என்றே நினைக்கிறேன். ஒரு போர்க்கால நடவடிக்கை மாதிரி என்னை உயிருடன் மீட்டெடுக்க ஆயத்தங்கள் நிச்சயம் நடைபெற்றுக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.

நாளை மறுநாள் ஐஸ்வர்யாவுக்கு ஸ்கூல் அட்மிஷன். எலெக்ட்ரிசிடி பில் இன்னும் கட்டவில்லை. சீனுவுக்கு கல்யாண ரிசப்ஷன் 27-ஆம் தேதி மாலை. சொத்தைப் பல்பிடுங்க டாக்டர். ராஜ்குமார் அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்கிறார். நாலாவது மாடி கடனாளியிடமிருந்து ஐந்தாயிரம் வரப்பெற வேண்டும்.

இதற்கெல்லாம் முன்பாக நான் இந்தக் கன செவ்வகத்துக்குள் மடிந்துபோய் விடுவேனா என்ன?

தடக்கென்ற சப்தத்துடன் லிஃப்ட் குலுங்கியது. அதிர்ந்து கண் திறந்தேன். தலைமேல் குண்டு பல்ப் எரிய, மின்விசிறி சுழன்று குளிர்காற்று இறங்கியது. சுதாரித்து எழ ஒரு கணமேனும் தராமல் வயிற்றில் ஒரு சுழற்சியை ஏற்படுத்திவிட்டு ஜிவ்வென்று கீழிறங்கியது லிஃப்ட். மறுபடி ஒளிர்ந்த மின்னணுத் திரையில் இறங்குமுகமாக எண்கள் மாறியது. தரைத்தளம் வந்து லிஃப்ட் நின்று…

‘அவ்வளவுதான் வெளியே போ’ என்கிற மாதிரி கதவுகள் அகலத் திறந்தன. பனியனுடன் வியர்வையில் உடலோடு ஒட்டியிருந்தது சட்டை. காதோரம் ஒரு துளி வழிந்து தரை தட்டியது. குளுமைக் காற்று முகம் தாக்கியது.

வெளியே நிறைய தலைகள் தென்பட்டன. ‘நல்வரவு’ என்றான் எவனோ சிரித்தபடி. மத்திய சிறையிலிருந்து விடுதலையானவன் போல் லிஃப்ட்டுக்குள்ளிருந்து வெளி வரும் என்னை அயல் கிரகவாசியைப் பார்ப்பதுபோல் பார்த்து, ஒரு அயல்நாட்டுத் தூதுவருக்கான வரவேற்பைக் கொடுத்தார்கள். மணி பார்த்தேன். 11.06. பிரமை பிடித்த மாதிரி இருந்தது. நான் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதை சுற்றியிருப்பவர்கள் எனக்கு அறிவித்தபடி இருந்தார்கள்.

முழுசாய் நூற்றி இருபத்தேழு நிமிடங்கள். இதோ நான் காப்பாற்றப்பட்டு விட்டேன். மின்சாரம் போகவில்லையாம். ‘லிஃப்டின் இயக்க கோளாறு’ என்று யாரோ சொன்னார்கள்.

யார் யாரோ என்னென்னமோ பேசினார்கள். அந்தக் கூட்டத்தில் கடனாளியின் முகமும் தெரிந்தது. என்னைப் பார்த்ததும் எல்லோரையும் விலக்கி முன் வந்தான்.

“நானும் கொஞ்சம் கீழே போய்ட்டு வரலாம்னு லிஃப்ட்டுக்கு வந்தேன் சார். லிஃப்ட் மேல வரலை அப்புறம் லேசா சந்தேகம் வந்துச்சு. எங்கேயோ மாட்டிக்கிச்சுன்னு – இதுக்கு முன்னாடி ஒரு தடவை ஆயிருக்கு இது மாதிரி. ஆனா இப்ப மாட்டிக்கிட்டது நீங்கதான்னு தெரியலை. எப்படியோ கஷ்டப்பட்டு எறக்கிட்டோம். மணி பதினொண்ணே கால் ஆயிடுச்சு. நான் வேணா வீட்ல ட்ராப் பண்ணட்டுங்களா?” என்றான்.

“இல்ல. வேண்டாங்க நான் ஆட்டோ புடிச்சு போய்க்கறேன். எல்லோருக்கும் ரொம்ப நன்றி…”

நான் விடுவிடுவென்று கொலாப்ஸிபிள் கேட்டைக் கடந்து வெளியே வந்தேன். எனக்கென்னமோ அவன் புதன்கிழமை பணத்தைத் திருப்பித் தருவான் என்று தோன்றவில்லை.

Advertisements

6 thoughts on “லிஃப்ட்

 1. Ah…… a very nice description. It happened to me 2.
  aana enn case vera….. naan oru 16 peroda(lift capacity 6 ) maatikitten.
  oru 20 mins marana avasthai………..
  athula irunthu maximum i avoid lift.
  mmmm may be oi got sory of Claustrophobia)))):

 2. ஒரு நன்றி விசுவாசம் வேண்டாமா பாருங்க குடுப்பானான்னு கதையின் கதாநாயக்ன் யோசிக்கறானே!!! 🙂

 3. மிக அற்புதமான கதையோட்டம். பல நல்ல எழுத்தாளர்கள்
  என்று பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் உங்களிடம் பாடம்
  எடுத்துக் கொள்ள வேண்டும்.வளர்க உமது எழுத்துப்பணி.
  elamraji@yahoo.ca

 4. நன்றி இளம் ராஜி (or ஈழம் ரஜி). நல்ல எழுத்தாளர்களிடமிருந்து நானும் நிறைய கற்றிருக்கிறேன். மேலும, ஒரு நல்ல எழுத்தாளனாக மாறவேண்டும் என்கிற முயற்சிதான் இதெல்லாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s