ஜனனம்

மரத்தடி டாட் காம் – 2004

“ம்மா..” என்று அடி வயிற்றின் வேதனையடங்கிய குரல் எழுந்து அடங்கியது. பெரிதாய் வீங்கின வயிறுடன் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு மிரண்ட விழிகளுடன் அது தரையில் கிடந்தது. பலவீனமான மூச்சில் வயிறு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. வைக்கோலின் உதவியால் தற்காலிகமாக மென்மையூட்டப்பட்ட மண் தரையில் “புஸ்ஸ்” என்ற பெருமூச்சுடன் அது புரள முயன்று தோற்றது.

அந்தப் பசுமாட்டைச் சுற்றி கவலையும் பதட்டமும் கலந்த முகத்தோடு எல்லோரும் நின்று கொண்டிருந்தோம். அமுதாவின் முகம் இதற்கு முன் எப்போதும் பார்த்திராத மிரட்சியுடன் இருந்தது. “லட்சுமிக்கு ஒண்ணும் ஆகாதுல்ல” என்றாள் டாக்டரைப் பார்த்து. தன் பெயர் உச்சரிக்கப்பட்டதில் ஒருமுறை பசுமாட்டின் உடல் குலுங்கி அடங்கியது. அமுதா அதன் தலையை வாஞ்சையாய்த் தடவிக் கொடுத்தாள்.

வெடர்னரி டாக்டர் நெற்றியைச் சுருக்கி மிகத் தீவிரமான யோசனையுடன் அமுதாவை நிமிர்ந்து பார்த்தார். அவர் வாயிலிருந்து வரும் செய்திக்காய் எல்லோரும் பரபரப்பாய் காத்திருக்க, பசுவின் வயிற்றினுள் பரிசோதிக்கக் கையுறையாய் பயன்படுத்திய பாலிதீன் கவரைக் கழற்றி ஓரமாய்ப்போட்டார். அவர் சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது.

“மாட்டு வயத்துல கன்னு தல திரும்பிருக்கு. காலும் தலையும் இடம் மாறியிருக்கு” என்றார் மெல்லிய குரலில்.

அமுதாவின் கண்களில் இதுவரை அணையிட்டு நின்றிருந்த நீர் “சர்” என்று கன்னத்தில் கோடிட்டுக் கீழிறங்கியது. அழுகையை அடக்கப் பார்த்த பிரயத்தனத்தில் “ம்க்” என்று சப்தம் வந்தது அவளிடமிருந்து.

“கன்னு போடற நேரம் ஊருக்குப் போகவேண்டாம்னு அப்பவே சொன்னேன் கேட்டியா” என்றாள் அமுதா அழுகையினூடே அவள் அம்மாவைப் பார்த்து. சேலை முந்தானையால் வாயைப் பொத்தி மாடிப்படியோரம் செய்வதறியாது நின்றிருந்த அவளின் அம்மா “யாரு நெனச்சா… இப்படியெல்லாம் ஆகும்னு… என்னை எதுக்குடி குத்தம் சொல்ற?” என்றாள்.

தரையில் லட்சுமி என்கிற அந்தப் பசுமாடு மறுபடி புரண்டெழ முயற்சித்தது. மறுபடியும் ஒரு வேதனையடங்கிய “ம்மா”. அந்தி மயங்கத் தொடங்கின அந்த நேரத்தின் நிசப்தத்தில் அந்த சப்தம் கொஞ்சம் கலவரமூட்டிக் கலைந்தது..

“இங்க பாருங்க… பேசிக்கிட்டுருக்கிற நேரமில்ல இது. வயித்துக்குள்ள கன்னு உசிரோட இருக்கறதுக்கு சான்ஸ் கம்மி. உடனே எப்படியாவது வெளிய எடுக்கணும். இல்லைன்னா மாடும் போய்ச் சேந்துடும். கொஞ்சம் சிரமப்பட வேண்டிவரும். ஒரு ஆறேழு ஆம்பளைங்க உதவிக்கு வேணும். அப்பறம் நெறைய சுடுதண்ணி, வைக்கோலு, கொஞ்சம் கயிறு, நாலு எமர்ஜென்ஸி லேம்ப், நாலஞ்சு சாக்கு எல்லாம் ரெடி பண்ணுங்க. எதுக்கால இருக்கிற ஃபேக்டரி கிரவுண்டுக்கு எப்படியாச்சும் பசுமாட்ட கூட்டிட்டுப் போயிடுங்க. நைட்டு ஒரு மணி ரெண்டு மணி ஆகலாம். நான் போயிட்டு ஒரு ஒம்பது மணிபோல வரேன். கூடவே எனக்கு லுங்கி, துண்டு வேணும் எடுத்து வைங்க”

டாக்டர் சுவரோர பைப்பில் கை கழுவிக்கொண்டார். அமுதா கொடியிலிருந்து உருவின துண்டை நீட்ட அதில் துடைத்துக் கொண்டார்.

“எல்லாரும் தைரியமா இருங்க. முயற்சி பண்ணிப் பாக்கலாம்.”

டாக்டர் தன் பழைய லேம்ரட்டா ஸ்கூட்டரில் ஏறி தெரு முனையில் மறைந்த பிறகு நாங்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்.

தூக்கலாய் மூத்திர-சாணி நாற்றமடிக்கும் அந்த தொழுவத்தில், நிலைமையின் தீவிரம் உணராத வேறு இரண்டு மாடுகள் கவலையற்று அசைபோட்டுக்கொண்டிருந்தன. ஓரத்தில் என்றோ உடைந்து உபயோகமற்றுப் போயிருந்த ஒரு ஆட்டுக்கல்லின் மேலமர்ந்து அமுதா தேம்பி அழ ஆரம்பித்திருந்தாள். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லையெனினும் என்ன செய்ய வேண்டுமென்று புரிந்தது. தோளில் மிதமாய் கனக்கிற டிபன் பாக்ஸ் மற்றும் அலுவலகக் காகிதங்கள் அடங்கிய லெதர் பேக் நான் இன்னும் வீட்டுக்குப் போகவில்லையென்பதை உணர்த்தியது. “இங்க பாரு அமுதா… சும்மா கவலப்பட்டு அழுதுகிட்டிருக்காத. வேணுங்கறதை ஏற்பாடு பண்ணு. நான் வீட்டுக்குப்போயி கைகால் மூஞ்சி கழுவிட்டு வந்துர்ரேன்.”

இதுவரை வியந்தோ, அதிர்ந்தோ, கவலையுற்றோ, வேடிக்கை பார்த்தோ நின்றிருந்த இரண்டு மூன்று பேர் தன்னிலை உணர்ந்து அமுதாவைத் தேற்ற முயற்சிக்க நான் மெல்ல நகர்ந்தேன். வீட்டுப் படியேறி செருப்பைக் கழற்றுமுன்..”என்னங்க அமுதா வீட்டு…” என்று ஆரம்பித்த ஹேமாவை “பாத்துட்டுத்தான் வர்றேன்” என்று நிறுத்தினேன். “பாவம்ல அந்த மாடு” என்றாள் நிறுத்தாமல். ஆபிஸில் என்றுமிருக்கும் டென்ஷன், பஸ் இறங்கி நடந்து வந்த களைப்பு, வந்ததும் கேள்விப்பட நேர்ந்த இந்த விஷயம் எல்லாம் சேர்ந்து வரவேற்பரை பிளாஸ்டிக் சேரில் என்னைக் கொண்டுபோய் அசதியாய் உட்கார்த்தி வைத்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் கண்மூடி அப்படியே சாய்ந்திருந்தேன். ஒரு நிலையில் நிற்காமல் யோசனைகள் ஓடின.

இரண்டு வீடுகள் தள்ளி இருக்கிற அமுதா வீட்டில்தான் தினசரி பால் வாங்குவது. மூன்று கறவை மாடுகள் இருக்கின்றன. இந்தத் தெருவில் நிறைய பேருக்கு இங்கிருந்துதான் பால் போகிறது. அது தவிர தேவைக்கேற்ப சாணி, வரட்டி என காசு கொடுத்து வாங்கிக் கொண்டு போகவும் ஆட்கள் வரும். ஒரு நகரத்தின் கான்க்ரீட் கட்டிடங்கள் அடங்கிய இந்தத் தெருவுக்கு மத்தியில் மாடுகள் அடங்கிய அவர்களின் வீடு கொஞ்சம் பிரதானமான வித்தியாசம்தான். மற்றவருக்கு என் வீடிருக்கிற பகுதியின் அடையாளம் சொல்வதற்குக்கூட அது வசதியாகவே இருந்தது.

தினமும் வழக்கமாய் பால் கறந்த கையோடு அமுதா அளந்து எடுத்துவந்து தந்துவிட்டுபோவாள். சில தினங்கள் ஹேமா போய் வாங்கி வருவாள். ஏதாவது ஓரிரு நாட்கள் அபூர்வமாய் நான் போவேன். அப்படி இரண்டு நாட்கள் முன்பு போனபோதுதான் அமுதா வீட்டுத் தொழுவத்தில் அந்த வெள்ளை சினைமாட்டைப் பார்த்தேன். அதன் பார்வையும், நிற்க முடியாமல் கால் மாற்றி நின்றிருந்த அதன் அவஸ்தை நிலையும், மாடுகளோடு எனக்கு எந்தப் பரிச்சயமும் இல்லையெனினும் ஏதோ ஒரு அசாதாரணத்தை உணர்த்தியது போலிருந்தது. “அல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க” என்றபடி பால் நிரம்பின எவர்சில்வர் சொம்பை என்னிடம் நீட்டின அமுதாவின் அண்ணனிடம் மாட்டைப் பற்றி விசாரித்தபோது “எல்லாம் அமுதா வந்து பாத்துக்கும்” என்று சொல்லிவிட்டு சாவதானமாய் பீடி பற்ற வைத்துக் கொண்டான். அப்போதே கவனித்திருந்தால் இப்படி விபரீதமாகாமல் தடுத்திருக்கலாமோ?

ஒன்பது மணிக்கு நான் எழுந்துபோய் கைகால் முகம் அலம்பிக் கொண்டு வந்தேன். ஒரு மிகப் பெரிய செயலுக்கான ஆயத்தம் போல நான் எனக்குள் உணர்ந்தேன். என்றாலும் மாட்டு டாக்டர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று என்ன யோசித்தும் சரியாய் புரிபடவில்லை. ஹேமாவிடம் இரவு டிபன் வேண்டாமென்றேன். “கண்டிப்பா அவங்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணியாகணும். சரியா ஆம்பளை துணையில்லாத வீடு அது. பாவம். பால் வியாபாரத்துல இருந்து வீட்டு நிர்வாகம் வரைக்கும் எல்லா வேலையையும் அமுதா ஒத்தை ஆளா இருந்து பண்ணுது. பிரயோஜனமில்லாத அண்ணங்காரன். அப்பங்காரன். நான் போயிட்டு வர்றேன். நைட்டு ரெண்டு மணி ஆகுங்கிறாங்க. நீ கதவத் தாப்பாள் போட்டுட்டுப் படுத்துக்க.”

சட்டை பட்டனைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன். அமுதா வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்த பக்கத்து வீட்டு நடராஜன் கையில் எமர்ஜென்ஸி விளக்கு இருந்தது. என்னைப் பார்த்ததும் சிரித்தார். “அங்கதானே?…வாங்க இன்னைக்கு நமக்கு நிறைய ஜோலி இருக்கும் போல. இந்தப் புள்ள அமுதா என்னடான்னா மாட்டைப் பாத்து பாத்து ஓ..ஓன்னு அழுது. ரொம்பப் பாசந்தான். இருந்தாலும்… அட.. கொஞ்சமாச்சும் தெகிரியம் வேணுமில்ல..” என்றார்.

பேசிக்கொண்டே தொழுவத்தை அடைந்தபோது பசுமாட்டை அங்கே காணவில்லை. எதிர்புற ஃபேக்டரி கிரவுண்டுக்கு அதை இடம் பெயர்த்தி விட்டார்கள் போல. வெளியே டாக்டரின் லேம்ப்ரட்டா நின்றிருந்தது. திறந்திருந்த கேட்டை தள்ளிக்கொண்டு கிரவுண்டுக்கு வந்தபோது ஒரு சின்னக்கும்பலின் நடுவே கால் மடக்கிச் சாய்ந்திருந்தது பசுமாடு. பாலண்ணன் நின்றிருந்தார். மளிகைக்கடை ஆறுச்சாமி இருந்தார். மேலும் சிவில் இன்ஜினியர் சுந்தரராஜன். கேபிள் டி.விக்காரர். இப்படி நிறைபேர் அங்கே உதவிக்குக் கூடியிருந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயமொன்றுமில்லை. எல்லாம் அமுதாவின் குணத்துக்கும் முகத்துக்கும்தான். ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்துக்கு முன்பான கசகசப்புபோல எல்லாரும் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தது காற்றில் கரைந்து தெளிவில்லாமல் காதுகளை வந்தடைந்தது. டாக்டர் தன் பேண்ட் சட்டையிலிருந்து லுங்கி பனியனுக்கு மாறியிருந்தார். போதுமான அளவு எமர்ஜென்ஸி லேம்புகள் கிடைக்காததால் வெளிச்சம் போதாமல் இருண்டிருந்தது அந்தப் பிரதேசம்.

கும்பலில் இருந்த எதிர்வீட்டு அழகப்பன் ஓரிரு நிமிட யோசனைக்குப் பிறகு வீட்டுக்கு ஓடினார். திரும்பி வரும்போது அவர் கையில் இரு பட்டிகளுடன் கூடிய ட்யூப் லைட்டுகளும் நிறைய ஒயர்களும் இருந்தன. அவர் பதினைந்து வயது மகன் கூடவே பெரிய ஸ்டூல் ஒன்றையும் எடுத்துவர.. பத்து நிமிடத்தில் பக்கத்துக்கூரையில் அவைகளை சேர்த்துக்கட்டி ஃபாக்டரி ஓனரிடம் போனில் அனுமதிபெற்று கனெக்ஷன் கொடுத்தார்கள். பளீர் வெண்மை வெளிச்சத்தில் இருள் விலகி பசுவின் அவஸ்தை இப்போது தெளிவாய்த் தெரிந்தது. நான் ஏறியிறங்கும் அதன் வயிற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நீ இருக்கியா.. போறீயா?” என்றார் டாக்டர் அமுதாவிடம்.

“இருக்கேன்”.

“சரி நேரமாகுது ஆரம்பிக்கலாம். சிரமம் பாக்காம எல்லாரும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” சொல்லிவிட்டு டாக்டர் மறுபடி பாலிதீன் கவர்களை கையுறைகளாய் அணிந்துகொண்டார். ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு பசுமாட்டினருகே கூட ஆரம்பிக்க.. டாக்டர் ஒருமுறை மாட்டைத் தொட்டு வணங்கினார். அமுதாவை ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டார்.

பிறகு நிறைய வைக்கோல் பரப்பியிருந்த தரைக்கு பசுவை நகர்த்தலாம் என்றார். ஆனால் மாட்டை அதற்குமேல் நகர்த்துவது சிரமமாயிருந்ததால் வைக்கோல்கள் இடமாற்றப்பட்டு அதனடியில் முடிந்தவரை பரப்பினார்கள். ஒருக்களித்துச் சாய்ந்திருந்த மாடு படுக்க வைக்கப்பட்டது. அமுதாவிடமிருந்து கயிறுகள் வாங்கி மாட்டின் கால்களைக் கட்டினார். பிறகு “நாலு காலையும் அழுத்திப் புடிச்சுக்குங்க. அசையவிடாதீங்க.. வாலை யாராவது தூக்கிப் புடிங்க” என்றார் நானும் நடராஜனும் இரு கால்களை அழுத்திக்கொள்ள, மற்ற இருவர் மற்ற இரு கால்களை. டாக்டர் கையுறைக் கையை மாட்டினுள் செலுத்தி சிறிது நேரம் பரிசோதித்தார். மாட்டை அப்படியே நாலைந்து தடவை திருப்பித்திருப்பிப் புரட்டிப் போடவேண்டுமென்றார்.

ஒரு நாலைந்துபேர் சேர்ந்து அதன் நான்கு கால்களையும் பிடித்து உயர எழுப்பி ஒரு சாக்கு மூட்டையைத் திருப்புவதைப் போல அப்படியே வலதுபுறம் திருப்பிப்போட்டோம். பிறகு வலதுபுறம். “ம்… அப்படித்தான்…தூக்கிப்போடுங்க…” டாக்டரின் குரல் உயர்த்திக் கத்தினார். வலது. இடது. வலது. இடது. “ம்..மா…” என்ற ஈனமான குரல் அதன் அடிமடியிலிருந்து புறப்பட்டது. என் உடல் ஒரு முறை நடுங்கிக் குலுங்கியது. நடராஜன் முகத்தைப் பார்த்தேன். கைகளில் அப்பியிருந்த தரை மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு அவரும் என்னைப் பார்த்தார். ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

“இப்ப அப்படியே மொத்தமா புரட்டிப்போடுங்க. கால் ரெண்டும் கீழ போய் அப்பறம் மேல வர்ர மாதிரி..”

கடவுளே.

புரட்டிப்போட்டோம். தாங்கவொண்ணாத வேதனையில் இன்னொரு கத்தல். புஸ்..புஸ்ஸென்று பெருமூச்சு அதிகமாகி வயிறு அதிக உயரம் ஏறி இறங்க ஆரம்பித்தது. ஓரிரு நிமிடங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் டாக்டர் மாட்டின் வயிற்றினுள் கை செலுத்தி பரிசோதனை நடத்தினார். இந்தமுறை கொஞ்சம் அதிக நேரம். வைத்தகண் வாங்காமல் அனைவரும் டாக்டரின் செய்கையையே பார்த்துக்கொண்டிருக்க அங்கு நிலவின நிசப்தத்தை உடைத்துக்கொண்டு சிவப்பு கலந்த திரவம் கொழகொழவென்று வெளியேறி வழிந்தது.

நெற்றியிலிருந்து பெருக்கெடுத்து வழிந்த வியர்வையை இடது கையால் வழித்தெறிந்தார். தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டார். பிறகு மீண்டும் பரிசோதனை. நான்கு நீளமான கயிறுகள் வாங்கி ஒவ்வொன்றின் முனையிலும் ஒரு சுருக்குப் போட்டுக்கொண்டு வயிற்றுக்குள் கைவிட்டு உள்ளே துழாவி அகப்பட்ட கன்றின் ஒவ்வொரு கால்களிலும் ஒவ்வொன்றாய்க் கட்டினார். துள்ளின மாடு பலப்பிரயோகத்தால் அடக்கப்பட்டது. இப்போது நான்கு கயிறுகள் மட்டும் மாட்டின் ஆசனத் துவாரத்தில் வெளிநீண்டிருந்தது. மாட்டைவிட பெரிதான பெருமூச்சொன்று டாக்டரிடமிருந்து புறப்பட்டது. எல்லோரும் உறைந்துபோய் நின்றிருக்க… முதலில் டாக்டர் பலம் முழுவதையும் திரட்டி இழுக்க அது லேசாய் வெளிவந்தது. கன்றின் ஒரு கால் குளம்பு.

“வாங்கப்பா இழுங்க. ஆனா விட்டுறக்கூடாது. அப்றம் கஷ்டம்.” டாக்டரின் கைகளுடன் இன்னும் பல கைகள் சேர்ந்துகொள்ள அந்தப் போராட்டம் ஆரம்பமானது. வெளித்தெறிந்த கன்றின் ஒரு காலை நான் பிடித்துக்கொள்ள மற்றவர்கள் கயிறுகளைப் பிடித்துக்கொண்டார்கள். குளம்பு, திரவத்தின் கொழகொழப்பில் பிடிகிடைக்காமல் வழுக்கியது. “ம்… இழுங்க..” என டாக்டரின் பத்து செகன்டுகளுக்கொருமுறை ஒலித்துக் கொண்டிருக்க பலங்கொண்டமட்டும் இழுக்க ஆரம்பித்தோம். திமிறின மாட்டை நான்குபேர் கால் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் அத்தனை எளிதில் எதுவும் நடந்து விடுவதாய்த் தோன்றவில்லை. முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு என் இதயத் துடிப்பு உயர்ந்து விட்டிருந்தது. எல்லோருடைய பெருமூச்சுகளும் இப்போது பூதாகரமாய் கேட்டது. கைகள் தகதகவென்று எரிந்து வலித்தன. இதெல்லாம் ஒரு வலியா?. குறைந்தபட்சம் இந்த தாய் மாட்டையாவது உயிரோடு காப்பாற்ற வேண்டுமே. இழு. இழு.

பட்டென்று கன்றின் குளம்பு மட்டும் குதிகாலோடு பெயர்த்துக் கொண்டுவிட.. இழுத்துக் கொண்டிருந்த எல்லோரும் மண்தரையில் தடுமாறிச் சரிந்தோம். அய்யோ என்று வாய் பொத்திக்கொண்டாள் அமுதா. “கெட்டுச்சு” என்றார் டாக்டர். “நகருங்க” என்று எல்லாரையும் விலக்கினார். மறுபடி வயிற்றுக்குள் கைவிட்டுத் துழாவினார். எதுவோ மீண்டும் அகப்படப் பலங்கொண்டமட்டும் பிடித்திழுத்தார். பட்டென்று ஒரு சப்தம் கேட்டது. “காலெலும்பு முறிஞ்சிருச்சுபோல” என்றார் யாரோ ஒருவர்.

“சும்மாருங்கய்யா” என்று டாக்டர் அதட்டினார். மாட்டின்மீதே சாய்ந்த மாதிரி படுத்துக்கொண்டிருந்தார் அவர். மீண்டும் ஒரு இழுப்பு. நீண்ட நேர முயற்சிக்குப்பின் ஒன்றும் முடியாமல் “சரி மூணு கயித்தையே இழுத்துப்பாப்போம். வாங்க…இழுங்க..” என்றார்.

இழுத்தோம். அத்தனை பேரின் பிரயத்தனமும் கவனமும் பலமும் பிரயோகிக்கப்பட்ட அந்த செயலில் கொஞ்சம் பலன் தெரியும்போல இருந்தது. வயிற்றுக்குள் நகர்ந்துகொடுக்கிற கன்றின் அசைவை கைகள் உணர்ந்தன. ஈரம் கலந்த ரத்தம், வழுக்கல்.. சணல் கயிற்றின் சொரசொரப்பில் கைகளின் எரிச்சல். ”விட்டுராதீங்க… விட்டுராதீங்க’ என்று டாக்டரின் எச்சரிக்கைக்குரல் அந்த நள்ளிரவில் எழுந்து எழுந்து அடங்கியது. எப்படியும் மணி பன்னிரண்டாவது இருக்கும்.

“கொடுமைங்க..” என்றார் நடராஜன் என் காதருகே. மீண்டும் அவரே சொன்னார். “வேற வழியில்ல..”

இப்போது மாடு தன் சக்தி முழுவதையும் இழந்து அரை மயக்க நிலைக்குப் போய்விட்டிருந்தது. மறுபடி ஒரு பத்து நிமிடங்கள் நடந்த அந்தப் போராட்டத்தின் முடிவில்.. குளம்பு முறிந்த கால் தவிர இன்னொன்றும் வெளித்தெரிந்தது. அதற்கப்புறம் எல்லாம் சுலபமாகிவிட்டது. இழுப்பின் திசையில் தாயின் மடியிலிருந்து கன்று சரேலென்று உருவிக்கொண்டு ரத்தக்கொழகொழப்புடன் சொத்தென்று வெளி வந்து விழ மறுபடி ஒரு முறை தடுமாறிச் சரிந்தோம். டாக்டரும்கூட. களைப்பான பெருமூச்சுக்களுடன் அத்தனை பேரின் பார்வையும் கன்றின் மேல் படிந்தது.

அமுதா ஓடிவந்து அதனருகே குனிந்தாள். அது உயிரோடிக்கிற சாத்தியக்கூறுகளை அவள் கண்கள் தேடி ஏமாந்தது. திறந்திருந்த அதன் அழகான விழிகளில் அதன் உயிர் எப்போதோ உறைந்து நிலைகுத்தியிருந்தது. அவள் கண்ணிலிருந்து நீர் பெருக்கெடுத்து வழிந்தது. கன்றின் உயிரற்ற சடலத்தினருகில் அப்படியே கால் மடங்கி உட்கார்ந்து கதறியழ ஆரம்பித்தாள்.

அந்த இடத்தின் அமைதியை விலக்கி பேச்சுக்குரல்கள் மெல்ல எழுந்தன. “ரொம்ப தேங்ஸ்ங்க. இத்தன பேரு உதவிக்குக் கிடைக்கும்னு நான் நெனைக்கவேயில்லை” என்று நன்றியோடு பார்த்தார் டாக்டர். மாட்டின் கால்களை அவிழ்த்துவிட்டார். கன்றினருகில் வந்து அதன் நான்கு கால்களையும் அலாக்காகத் தூக்கி மாட்டினருகில் “இந்தா” என்று போட்டார். அவரின் அந்த வார்த்தையில் நிறைய அர்த்தங்கள் புதைந்துகிடந்த மாதிரி உணர்ந்தேன். டாக்டர் கையுறைகளைக் கழற்றி வீசிவிட்டு பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கைகழுவிக்கொண்டார்.

“ஒரு வழியா ஆச்சு” என்றபடி கைகழுவிவிட்டு நடராஜன் எமர்ஜென்ஸி விளக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார். ட்யூப் லைட்டுகள் கழற்றப்பட்டு மறுபடி இருள் சூழ்ந்தது. அழகப்பன் மறுபடியும் மகனுடன் ஸ்டுல் உட்பட தன் பொருள்களைச் சேகரித்துக்கொண்டு நகர்ந்தார். இஞ்ஜினியர், கேபிள்காரர், மளிகை ஆறுச்சாமி எல்லோரும்கூட நகர ஆரம்பித்தார்கள்.

மாட்டுக்கு மற்ற சிஷ்ருஷைகளையும், சோதனைகளையும் முடித்துவிட்டு “காலைல சீக்கிரமா மறுபடி வந்து பாக்கறேன்” என்று நடுநிசியின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு டாக்டரின் லேம்ரட்டா புறப்பட்டுச் சென்றபிறகு மற்றவர்களும் கொட்டாவியைச் சுமந்தபடி நடையைக் கட்டினார்கள்.

நான் இன்னும் நின்றிருந்தேன். மனது கலக்கமாயிருந்தது. ‘உனக்கப்புறம் ஒரு பொட்டப்புள்ள ஆறுமாசத்திலயே குறையா பொறந்து இறந்துடுச்சு’ என்று அம்மா என்றைக்கோ ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்து போனது. என் கண்கள் லேசாய் ஈரமாகிவிட்டிருந்ததை உணர்ந்தேன்.

“கேட்டை மூடிரலாங்களா” என்று ஃபாக்டரி வாட்ச்மேன் குரல் என் கவனத்தைக் கலைத்தது. கடைசியாய் அமுதாவும் நானும் மட்டும் வெகுநேரம் அமைதியாய் அங்கு நின்றுகொண்டிருந்தோம். வெளிச்சம் கரைந்த இருளில் நிழலுருவமாய் தெரிந்த அமுதாவின் கண்களில் இன்னும் நீர் இருந்தது.

வேதனை கொஞ்சம் தணிந்திருந்த பசுமாடு மெல்ல ஒருக்களித்து எழுந்து அருகில் கிடந்த இறந்த கன்றின் உடலை வாஞ்சையுடன் நக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தது. நான் அதையே உறைந்துபோன நெஞ்சோடு இன்னும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

வீட்டுக்குத் திரும்பும்போது கிரவுண்டிலிருந்து “ம்ம்..மா” என்கிற குரல் மறுபடி எழுந்து தேய்ந்தது. என் உடம்பு ஒரு முறை லேசாய் சிலிர்த்து அடங்கியது.

Advertisements

5 thoughts on “ஜனனம்

  1. இது கதை மாதிரி இல்ல….உயிரை பிசைந்துடுச்சி….ஒரு தாயின் வலி…

  2. மனதை நெருடிய கதை, பசுவை தாய் அன்போடு கதை நெடுக நினைக்கவைத்தது.

  3. manathai valikka seitha kathai,pasuvin prasava valiyai amudhavai vida adhigama unargiren

    Ravi.Rமனதை பிசைந்துடுச்சி

  4. The tears just blink on my eyes,Apart from that nothing to describe about this live feelings; Thanks Mr.Chithiran

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s