இன்னுமொரு ஞாபகம்

கல்கி : மே 1995

பஸ் கோவையை நெருங்கிக் கொண்டிருந்தது. அரைகுறை தூக்கம் கலைந்து விழித்தேன். இடுப்பெல்லாம் வலித்தது. சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு பன்னிரண்டு மணி நேரப் பயணமாகிவிட்டது. நிமிர்ந்து உட்கார்ந்தேன். சின்னக் கொட்டாவி ஒன்று நிதானமாய் ரிலீஸ் ஆனது.

கண்கள் அனிச்சையாய்த் திரும்பி என் வரிசை பக்கவாட்டு ஸீட்டில் அந்தப் பெண்ணைப் தேடின. ‘மடையா! அவள்தான் சேலத்திலேயே இறங்கிவிட்டாளே!’

யோசனைக் குதிரை பின்னோக்கி அந்தப் பெண்ணை நோக்கி ஓடியது.

என்ன ஒரு அழகான பெண்?!! சென்னையில் தனியாய் ஏறினாள். வழியனுப்ப யாராவது வந்திருந்தார்களா என்று கவனிக்கவில்லை. அவள் முகத்தில் ஒரு தனி செளந்தர்யம். என் வரிசை ஸீட்டில் அவள் உட்கார்ந்ததற்கு எனது போன ஜென்மத்து புண்ணியங்கள் காரணமாயிருக்கலாம்.

ஆனால் அவள் இடதுகால்!? பஸ் படிகளில் ஏறும்போது அவள் நிறையவே சிரமபட்டதாய் உணர்ந்தேன். ஊனம். மெதுவாய் விந்தி விந்தி நடந்து ஸீட்டுக்கு வந்தாள். ஒரு கையில் சின்ன சூட்கேஸ். அழகைக் கொடுத்த இயற்கை, காலில் குறையையும் கொடுத்திருக்கிறது. திடீரென்று அந்தப் பெண்ணை எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது.

என் தலைக்கு மேலுள்ள லக்கேஜ் கேரியரில் அவள் சூட்கேஸை வைக்க உதவினேன். புன்னகைத்தாள். அவளோடு பேச வேண்டும் என்றெழுந்த ஆவலைக் கட்டுபடுத்திக் கொண்டேன்.

சேலத்தில் அவள் இறங்கிக் கொண்டாள். அவளைப் பற்றின யோசனைகள் மனத்தைவிட்டு இறங்காமல் கோவை வரை பிடிவாதமாய் வந்துவிட்டன. ஊனமுற்ற அந்த அழகான பெண்ணிற்கு எந்த மாதிரி எதிர்காலம் காத்திருக்கிறது? சிந்தனைகள் வட்டம் அடித்தன.

“பஸ் ஸ்டாண்டு கேட்டது யாரு? இறங்குங்க…”

கண்டக்டர் கத்தினார். அதற்குள்ளாகவா கோயமுத்தூர் வந்துவிட்டது?

நான் வேகமாய் எழுந்து, லக்கேஜ் கேரியரிலிருந்து சரக்கென்று என் சூட்கேஜை உருவிக் கொண்டு இறங்கினேன்.

ராம் நகரில் என் அறைக்கு வந்து, பல் விளக்குவதற்காக பேஸ்டை எடுக்க சூட்கேஸைத் திறந்தவன் திகைத்து நின்றேன்.

‘மைகாட்!’

அந்த சூட்கேஸூக்குள் இரண்டு புடைவைகள், ரவிக்கைகள் ஒரு சுரிதார் மற்றும் உள்ளாடை எல்லாம் தென்பட…

இது என் சூட்கேஸ் இல்லை!

அதிர்சியிலிருந்து மீளாமல் அதை மூடி மேல்புறம் பார்த்தேன். ‘எஸ். நீலா’ என்று ஆங்கிலத்தில் பெயர் தாங்கின ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.

உண்மை உறைத்தது. உடலில் கலவரம் தொற்றிக் கொண்டது. சூட்கேஸ் கைமாறிவிட்டது. எப்படி? எப்படி? யோசிக்க ஆரம்பித்தேன். எங்கே வைத்திருந்தேன். அதை! தலைக்கு மேலேயே லக்கேஜ் கேரியரில். அங்கிருந்துதான் திரும்ப எடுத்… ஆம்! அந்தப் பெண்! அவன் சூட்கேஸையும் நான்தானே வாங்கி அதே இடத்தில் வைத்தேன். அதுவும் கூட இதே மாதிரிதானே இருந்தது. இல்லை. அதுதான் இது. என்னுடையது மாதிரியே. நிறம், உருவம், அளவு எல்லாம்.

என்னுடைய சூட்கேஸை அவள் எடுத்துக் கொண்டு போயிருப்பாள். ‘அந்த சூட்கேஸுக்குள் என்னுடைய அந்த..! ‘கடவுளே!’ என் அடிவயிற்றில் ஒரு பயம் மெல்ல கிளர்ந்தெழுந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

ஒருவேளை அவள் ஏதாவது ஃப்ராடு கேஸோ? ச்சே! இருக்காது. அந்தக் குழந்தை முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.

எஸ். நீலா!

இதுதான் அவள் பெயரா? இந்த நீலாவை நான் எங்கே போய்த் தேடுவேன்? நான் அந்தப் பெட்டியை மறுபடி திறந்து புரட்டி அட்ரஸ் எதுவும் கிடைக்குமா என்று பார்த்தேன். வெறும் துணிகள். கோல்கேட் பேஸ்ட் பிரஷ் மற்றும் பெண்கள் சமாசாரங்கள். இரண்டு புத்தகங்கள் ‘மைக்ரோஸாஃப்ட் சி’, ‘கிவ் அண்ட்டேக்’, ஒரு சின்ன பர்ஸ். இருநூற்றிப் பன்னிரண்டு ரூபாய் ஐம்பது பைசா அதில் இருந்தது. ஒரு காலி இன்லேண்ட் லெட்டர். அட்ரஸ் மட்டும் இல்லை.

ஆனால் என் சூட்கேஸீக்குள் இருக்கிற பொருட்கள்? வெறும் பொருட்களா அவை? உடைகள் ஷேவிங் செட்டை விடுங்கள். மற்றதெல்லாம்..

என் ஐம்பத்து மூன்று கவிதைகள் தாங்கிய ஸ்பைரல் போட்ட ஒரு குயர் நோட்டு. வித்யாவின் கழுத்து மணி மாலையிலிருந்து அறுந்து விழுந்த மணிகள், கடிதங்கள், மேலும் கடிதங்கள், சாலை விபத்தொன்றில் பலியான என் உயிர் நண்பன் எனக்கெழுதிய ஒரே ஒரு கடிதம், கையில் பொம்மை பஸ் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த என் ஒரே குழந்தை ஃபோட்டோ, அழகான பூனைக் குட்டிகள் படம் போட்ட – குழந்தை ராஜி என் பிறந்த நாளுக்கு பரிசளித்த – போல்ஸ்கா நாட்டு ஸ்டாம்புகள், என் ஐடென்டிடி கார்டு, தாத்தா ஞாபகமாய் வைத்திருந்த பாக்கு சீவுகிற கத்தி, ஜீவா பரிசளித்த தி. ஜானகிராமன் புத்தகங்கள், என் சிறுகதை வெளியான ஆனந்த விகடன் புத்தகத்தின் ஒரே பிரதி, பேனாக்கள், கண்ணாடி க்ளாஸ், ஒரு காய்ந்த பெல்ட், ஆடியோ கேஸட், வளையல் துண்டு, மயிலிறகு, என் டயரி, அதற்குள் நான் மிக முயற்சித்துப் பெற்ற அருமை வித்யாவின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ… இன்னும் சில பொருட்கள்.

என்னைப் பொறுத்தவரை இது எல்லாமே பொக்கிஷங்கள். குப்பை என்று எதுவும் கிடையாது. கேட்பதற்குச் சிரிப்பாய்க்கூட இருக்கும். ‘சுத்த கிறுக்கனா இருக்க’ என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தப்பொருட்கள் எல்லாமே ஒவ்வொருவருடைய நினைவுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டு கிடக்கிற பொக்கிஷங்கள். எப்போதாவது எடுத்துப் பார்க்கும்போது கிடைக்கும் அந்த இனிமையான பழைய நினைவுகளுக்காய் ஒவ்வொன்றையும் பொக்கிஷமாய் பத்திரப்படுத்தியிருந்தேன். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவர் ஞாபகம்.

போச்சு! எல்லாம் போச்சு!

லீவில் ஊருக்குப் போன நான் இவை எல்லாவற்றையும் எப்போதும் என்னுடனேயே வைத்திருக்கலாமே என்று சூட்கேஸூக்குள் அடைத்துக் கொண்டு வந்தேன்.

நிமிடத்தில் எல்லாவற்றையும் இழக்க வேண்டியதாய்ப் போயிற்று. பிரமை பிடித்த மாதிரி இருந்தது. அழுகைகூட வரும்போல் தோன்றியது. உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கினேன். ஜீரணிக்க முடிகிற இழப்பாய்த் தோன்றவில்லை இது.

வெளியே வந்து ட்ராவல் ஏஜென்ஸிக்கு நம்பிக்கை இல்லாமல் ஃபோன் பண்ணிப் பார்த்தேன். நினைத்த மாதிரியே அவள் அட்ரஸ் எதுவும் கிடைக்கவில்லை. பேர் சொல்லிவிட்டுப் பணம் கட்டினால் கோயமுத்தூர் கொண்டு வந்து இறக்கி விடுகிறார்கள். ஸீட் நம்பர்கள் எழுதின லிஸ்டில் பெயருக்கு நேரே ஒரு கையெழுத்து. அட்ரஸ் எங்கேயிருந்து கிடைக்கும்? என்ன ட்ராவல் ஏஜென்ஸி நடத்துகிறார்களோ!

ஏன் சூட்கேஸில் என் ஐடென்டிடி கார்டு இருக்கிறதே. அதில் என் அட்ரஸ்!

லேசாய் எனக்கு உயிரும் நம்பிக்கையும் மீண்டும் வந்தது. அவள் பெட்டி என்னிடமிருக்க, அவள் என்னை நிச்சயம் தொடர்பு கொண்டுதான் ஆக வேண்டும். அதுவரை காத்திருக்கலாம்.

ஒரு வாரம் மகா சோகமாய்க் கழிந்தது. என் பெட்டி இனி எனக்குக் கிடைக்காது என்று நான் தொண்ணூற்றைந்து சதவீதம் முடிவு செய்துவிட்டேன். அவளின் ‘மைக்ரோசாஃப்ட் சி’ யைப் புரட்டினேன். ஒரு மண்ணும் புரியவில்லை. ‘கிவ் அண்ட் டேக்’கை நடுநடுவில் படித்துப் பார்த்தேன்.

அடுத்தவாரம் அந்தப் பார்சல் வந்தது. ஆச்சரியம். ஏக குஷியானேன். என்னுடைய பொக்கிஷப் பெட்டி பாதுகாப்பாய் வந்து சேர்ந்திருந்தது. கூரியர் சர்வீஸ் வாழ்க! நான் சந்தோஷத்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தேன்.

சூட்கேஸை அவசரமாய்த் திறந்தேன். நான் வைத்தபடி இல்லாமல் எல்லாம் கலைந்திருந்தன. ஆனால் எல்லாமே இருந்தன. சாய்ந்த கையெழுத்தில் ஒரு கடிதமும். பெயர் பார்த்தேன். நீலா. எஸ்.நீலா. அவளேதான். நிதானமாய்ப் படித்தேன்.

‘டியர் மிஸ்டர் பிரபாகர்…

இதோ உங்கள் உடைமை. (உங்களுடையதுதானென்று நினைக்கிறேன்.) அதுபோல் என்னுடையது உங்களிடம் இருக்குமென்று நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் காரணம் நான்தான். என் கவனக்குறைவு. மன்னிப்பீர்களா?

உங்கள் பெட்டியை அது பூட்டப்படாததால் திறந்து குடைந்தும் பார்த்தேன். உங்கள் அனுமதியில்லாமல். மறுபடியும் மன்னிக்கவும். பெட்டியின் விஷயங்கள் ரொம்ப சுவாரஸ்யமாயிருந்தன. நீங்கள் எந்த மாதிரி ஆள்? பிடிபடவில்லை.

கடிதங்களைப் படிக்க மனம் வரவில்லை. நாகரீகம் காரணம். கவிதை நோட்டை மூன்று மணி நேரம் செலவழித்துப் பொறுமையாய்ப் படித்தேன். அத்தனையும் வாவ்! எனக்கு ரொம்பப் பிடித்தது. நீங்கள் ஒரு கலைஞன் என்று புரிகிறது.

ஃபோட்டோவில் சிரிக்கும் அந்தக் கறுப்புக் குழந்தை யார்? ரொம்ப ஸ்வீட். ஐடென்டிடி கார்டின் ஃபோட்டோவில் நீங்கள் சுமார்தான்.

ஆனந்த விகடன் புத்தகத்திற்கு எதற்கு அட்டையெல்லாம் போட்டு வைத்திருக்கிறீர்கள்? அதுவும் பழைய்…ய புத்தகம். நான் உங்களின் தி. ஜானகிராமன் புத்தகங்களை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது ரூம்மேட் பானு அந்த சூட்டுக்காயை நிலத்தில் தேய்த்து, ‘சுள்’ளென்று சூடு வைத்த இடம் இன்னும் வலிக்கிறது. அந்த ஆடியோ கேஸட் கேட்க முடியவில்லை. பிழைத்தீர்கள்!

மேலும் வளையல் துண்டு, மயிலிறகு, மோதிரம், மணிமாலை… ஃபோட்டோவில் அந்தப் பெண். யார் அது? உங்கள் மனசுக்குள் இருப்பவளா? தப்பாய்க் கேட்டிருந்தால் ஸாரி…! கத்தி எதற்கு?

என் பெயர் நீலா, சென்னையில் தனியாய் பஸ் ஏறிச் சேலத்தில் இறங்கின கொஞ்சூண்டு அழகான பெண். கவனித்திருப்பீர்கள். (வேறொன்றையும் கவனித்திருக்கலாம்) சேலத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பு. முகவரி கீழே…

என் பெட்டி ப்ளீஸ்…

கீழே முகவரி இருந்தது. யப்பா! ஒன்றை விட்டுவைக்கவில்லை. புரட்டி எடுத்திருக்கிறாள். எனக்கு அதனால் கோபம் வரவில்லை. அவள் ஆர்வத்தை நினைத்து புன்னகை வந்தது.

இன்டரஸ்டிங் கேர்ள். இவளைப் போய் ஃப்ராடு என்றெல்லாம் நினைத்தேனே! ரொம்ப வெளிப்படையான டைப் போலும்.

‘நீலா’ என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். அவள் முகம் முழுதாய் நினைவுக்கு வராமல் கலைந்து கலைந்து போனது. ஒரே தடவை பார்த்தது. என் பொக்கிஷத்தைத் திருப்பி என்னிடமே ஒப்படைத்தவள்.

நீலாவின் சூட்கேஸை ஒழுங்குபடுத்தினேன். என் மதிப்பான ஒரே கவிதை நோட்டை எடுத்தேன். அதன் உள் அட்டையில், ‘நீலாவுக்கு… நன்றியுடன் ப்ரபாகர்’ என்றெழுதி அதையும் அவள் சூட்கேஸில் வைத்தேன். ரொம்ப சந்தோஷமாயிருந்தது. சூட்கேஸை ரொம்ப சிரத்தையாய் பார்சல் செய்து அவள் முகவரி எழுதி அனுப்பி வைத்தேன்.

அப்புறம்… அவளின் அந்தக் கடிதத்தை அழகாய் மடித்து.. என் மற்ற பொக்கிஷங்களோடு அதையும் சேர்த்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். மற்றொரு ஞாபகச் சின்னமாய்!

Advertisements

7 thoughts on “இன்னுமொரு ஞாபகம்

  1. அருமையான வாய்ப்பை தவறவிட்டுவிட்டாய் பிரபாகரா!

    கோவைக்கும் சேலத்திற்கும் அவளவு தூரமா என்ன…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s