அறை

மரத்தடி டாட் காம்

எனக்கு எதிரே அந்த அறை இருந்தது. வார்னீஷ் உபயத்தில் வருடங்கள் தாண்டி இன்னும் மினுமினுக்குகிற அதன் பெரிய கதவில் என் கண்கள் நிலைத்திருந்தன. அந்தக் கதவில் ஒரு புத்தரின் உருவம் தாங்கின ஸ்டிக்கர் ஒன்று. கண்கள் மூடி போதி மரத்தடி ஞானம். அதை அந்த அறையெங்கும் பரப்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறது. என் முன்பாக இன்னும் திறக்கப்படாத அந்தக் கதவின் உட்புற மர்மங்களின் மேல் என் கவனம் வெறி கொண்டு அலைந்து கொண்டிருந்தது. ஷிவ்ராம் ஏன் அந்த அறையை மட்டும் இன்னும் எனக்கு திறந்து காட்டாமலிருக்கிறார்? என்ன இருக்கிறது அந்த அறைக்குள்? அது ஏன் பூட்டியே கிடக்கிறது?

இந்தக் கேள்வியை முன்பு ஒருமுறை அவரிடம் நான் கேட்டபோது மையமாகப் புன்னகைத்துவிட்டு பதில் சொல்லாமல் நழுவிவிட்டார்.

நான் அந்த அறைக் கதவின் எதிரே இருக்கிற ஸோபாவில் சாய்ந்து அதை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். பல மாதங்களாக இங்கு வரும்போதெல்லாம் இது நடக்கிறது. ஷிவ்ராம் தனித்து வசிக்கும் இத்தனை பெரிய வீட்டிற்கு இந்த அறையை அவர் உபயோகிக்காமல் விட்டுவைப்பதில் அத்தனை நஷ்டமொன்றுமில்லைதான். ஆனால் இந்த வீட்டுக்குள் இத்தனை சுதந்திரமாய் உலவ எனக்கு அனுமதி தந்த ஷிவ்ராம் என்னை அந்த அறைக்குள் இன்னும் அனுமதிக்காமல் வைத்திருப்பது உறுத்துகிறது. அது பற்றிக் கேட்டபோது அது ஸ்டோர் ரூம் என்று ஏதாவது சொல்லிச் சமாளித்திருந்தால் மேற்கொண்டு நான் எதுவும் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் அன்று அவர் முகம் லேசாய் மாறியதும், ‘அதை எதுக்குப் பார்க்கணும், அங்கே ஒண்ணுமில்லை’ என்று லேசான நடுக்கத்துடன் சொன்னதும் அதை திறந்து பார்க்கிற
வலை அதிகப்படுத்திவிட்டது. மேலும் நாம் அதிகம் நேசித்து வசிக்கிற இடத்தில் அறைகள் முக்கியமில்லையா?

ஷிவ்ராமை நான் எங்கே எப்படி சந்தித்தேன் என்பது பெரிய சுவாரஸ்யமான விஷயம் அல்ல. இந்த ஒரு வருடத்தில் எங்கள் நட்பு எப்படி வலுப்பட்டு இறுகியது என்பது வேண்டுமானால் சிறப்புச் செய்தியாகச் சொல்லலாம். ஒரு தடவை என் லோக்கல் நகரத்தில் நடந்த ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் ·போர் ·பார் வெனிஸ் பார்க்கப் போனபோது அறிமுகமானவர் ஷிவ்ராம்.

அவருக்கு ஒரு அறுபத்தைந்து வயதிருக்கலாம். ஜிப்பா. வெண்தாடி. தீட்சண்யமான கண்களை அணைத்திருக்கிற கண்ணாடி. அவரிடமிருந்து ஒரு தலைமுறை தள்ளியிருக்கிற என்னை அவருக்கு எப்படி பிடித்துப்போனதென்று தெரியவில்லை. ஒரு வேளை நான் சினிமாவில் பணியாற்றிக்கொண்டு சினிமாவை நேசிக்கிறவனாக இருப்பதால்கூட இருக்கலாம். உலக சினிமாக்கள், தேசிய அரசியல், இசை, ஓவியம் எல்லாம் பற்றி அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்போல் இருக்கும்.

ஒரு நாள் வீட்டுக்கு வாயேன் என்று கூப்பிட்டார். போனேன். ஆறேழு அறைகளுடன் கூடிய பெரிய வீடு. பிரமிப்பாய் இருந்தது. நல்லவிதமாய் பராமரிக்கப்பட்ட அறைகள். வாழ்வுத் தேவைக்கு அதிகப்படியாய் வசதிகள். அத்தனை பெரிய வீட்டில் அவர் தனியாய் இருந்தார் என்பது ஆச்சரியத்தை அளித்தது. ஒரு வேலைக்காரர் மட்டும் அவ்வப்போது வந்து போவார்.

அவர் உறவுகள் பற்றி பொதுவாய் விசாரித்தபோது என்னை அவர் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்று டேபிள் ட்ராயரிலிருந்து போட்டோ ஒன்றை எடுத்து நீட்டினார். சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், ஒரு பத்து வயதுப் பையனும் அதில் இருந்தார்கள்.

“என் மனைவியும், பையனும்..” கொஞ்சம் மெளன இடைவெளிவிட்டு “அவ சின்ன வயசிலயே போய்ச்சேர்ந்துட்டா.. பையன் கொஞ்சம் பெரியவனாகி..”

மேற்கொண்டு எதுவும் அவர் சொல்லவில்லை. எனக்கும் தயக்கத் திரைகளைக் கடந்து குடைந்து கேட்பதற்கும் விருப்பமில்லாமலிருந்தது. எத்தனை பழகினாலும் ஒவ்வொருவருக்கும் அந்தரங்கங்கள் வேறுவேறு. விருப்பமிருந்தால் அவராக ஒரு இளகின பொழுதில் எல்லாம் சொல்வார் என்று நம்பிக்கையிருந்தது. அதற்காக என் காதுகள் தயாராகவும் இருந்தன. பேசுவதை விட கேட்பது எனக்குப் பிடிக்கும்.

என்னிடம் மிகப் பிடித்த குணமும் அதுதான் என்று அவரே சொல்லியும் இருக்கிறார். ‘எப்படி நான் பேசறது எல்லாத்தையும் சகிச்சுக் கேட்டுட்டிருக்கிற?’ என்றும் கேட்பார் சிரித்தபடி. ஷிவ்ராமிடம் எனக்கு என்ன பிடித்தது என்று யோசித்தால் முதலில் ஞாபகத்துக்கு வருவது மென்மையில் தோய்த்தெடுத்த அவரது குரல். மெல்லிசாய் ஆனால் உறுதியாய் வெளிப்படுகிற அந்தக் குரலில் யாருமே கட்டுண்டு போவார்கள்.

முதல் சந்திப்பில் சம்பிரதாயமாய் ரம்பித்த பேச்சு பரிணாம வளர்ச்சியடைந்து இப்போது வெகு தூரம் முன்னேறிவிட்டது. சில நாட்கள் நான் அவருக்கு சமைத்துப் போட்டிருக்கிறேன். வீட்டைச் சுத்தம் செய்திருக்கிறேன். வேலையில்லாதபோது ஒரு முழுநாளும் அவருடனேயே இருந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். அவருடன் மேலும் ஓருசில உலக சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். என் வீட்டுக்குப் போகாமல் அவர் வீட்டிலேயே நிறைய நாள் தங்கியிருந்திருக்கிறேன்.

ஷிவ்ராம் அடுக்களையில் எங்களிருவருக்கும் காபி தயாரித்துக்கொண்டிருக்கிறார். இன்று மறுபடியும் அவரிடம் கேட்டுவிடலாம் என்று தோன்றியது. அந்த அறை ஏன் பூட்டியே கிடக்கிறது?

ஆவி பறக்க ட்ரேயில் காபியுடன் அவர் வந்த போது மெதுவாய் “ஷிவ்..” என்றேன். (என்னை அப்படித்தான் கூப்பிடச் சொல்லியிருக்கிறார்). “இ·ப் யூ டோன்ட் மைண்ட்.. எனக்கு அந்த ரூமைப் பாக்கணும்”

இந்தத் தடவை அவர் சமாளிப்பதற்கான பதில் தேடி எதுவும் யோசிக்கவில்லை. எனக்கு உடனேயே எந்த பதிலும் சொல்லவில்லை. காபியை உறிஞ்சிக்கொண்டே கீழே குனிந்து சிறிது நேரம் பேசாமலிருந்தார். நேரம் கடந்தது. காபியின் கடைசி ஸிப்பை ருசித்துவிட்டு எழுந்தார். மெல்ல நடந்து உள்ளறைக்குச் சென்றுவிட்டார். எனக்கு ஒரு மாதிரி இருந்தது. ரொம்ப உரிமை எடுத்துக் கொள்கிறேனோ என்று என் மேலேயே கோபமாய் வந்தது. காபியின் கசப்போடு இது வேறு சேர்ந்துவிட்டது.

ஷிவ் ஓரிரு நிமிடங்களில் திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு சாவிக்கொத்து இருந்தது. என்னை நெருங்கினார். என் வலக் கையை எடுத்து சாவியை அதில் திணித்தார். “நீயே திறந்து பாத்துக்கோ” என்றார் புன்னகைத்தபடி.

“ஷிவ் நான் ரொம்ப உரிமை எடுத்துக்கறனா உங்ககிட்ட?”

அவர் பதில் சொல்லவில்லை. சாவிக்கொத்தை நீட்டிய கையும், அவர் புன்னகையும் அப்படியே இருக்கிறது. சரி! இனி இதில் மறுக்க என்ன இருக்கிறது? மேலும் என் இத்தனை நாள் ஆவல் என்ன? அந்த அறையை திறந்து பார்ப்பதுதானே? அவரும்கூட அதை எனக்குத் திறந்து காட்டுகிற தீர்மானத்தில்தான் இருக்கிறார் என்றும் தெரிகிறது. அப்புறம் என்ன?

மெதுவாய் சாவியை வாங்கிக்கொண்டு அந்தக் கதவிடம் நகர்ந்தேன். நான் யோசனையுடன் மெதுவாய் சாவித்துவாரத்துக்குள் அதைச் செலுத்தித் திருப்புவதை ஷிவ் அதே புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கதவின் மகா மெளனம் கலைகிற ஓசை ‘ப்ளக்’ என்று கேட்டது.

நான் கதவை தள்ளித் திறந்தேன். மறுநொடி என் முகத்தில் வந்தமர்ந்து தாண்டவமாடிய உணர்ச்சிகளைச் சொல்லமுடியாது. அத்தனை பெரிய அறையை நான் அங்கே எதிர்பார்க்கவில்லை. நீளமாய் மிகப்பெரிய அறை. இத்தனை நாள் இந்த வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தபோதெல்லாம் இதன் அமைப்பு எனக்கு பிடிபடாமல் போயிருக்கிறது. அதனுள்ளே லேசாய் நான் உள்நுழைய முற்பட குப்பென்று ஒரு நாற்றம் தாக்கியது. கதவில் பின்னியிருந்த சிலந்தி வலைகள் என் முகத்தில் கவிழ்ந்தன. காற்றில் தூசி நெடி மூக்கில் நெருடியது. பாதத்துக்குக் கீழே குப்பை நறநறத்தது. ஜன்னல்கள் திறக்கப்படாமலிருந்ததால் பாதி இருண்டிருந்தது.

அந்த அறைக்குள் நுழைந்தவுடன் என் ஆச்சரியத்தை பல மடங்கு உயர்த்திய அடுத்த விஷயம், அறையின் இரண்டு பக்கமும் பெரிய பெரிய அலமாரிகளில் நிரம்பி வழியும் புத்தகங்கள். நான் ஒரு புதையலைக் கண்டுபிடித்தவனின் உத்வேகத்துடன் அந்த புத்தகங்களை நெருங்கினேன். பெரியதும் சிறியதும் ஆக என்னென்னவோ புத்தகங்கள். குறைந்தபட்சம் மூவாயிரம் இருக்கும். அதிக பட்சம் ஆங்கிலம். ·போட்டோகிராபி பற்றி நிறைய இருந்தன. அப்புறம் அதுதவிர அலமாரிகளுக்கு மேல் ·ப்ரேம்கள் இடப்பட்ட பெரிய பெரிய புகைப்படங்கள். ஷிவ் ஒரு முறை காட்டிய அவர் மனைவி மற்றும் மகனின் ·போட்டோவும் அதில் இருந்தது. ஷிவ்ராமின் இளமைக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் போர்ட்ரைட் ஒன்று. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிதார்கள். அதில் அதிர்ந்து அறுந்திருந்த கம்பிகள். அறையின் நடு நாயகமாய் ஒரு சுழல் நாற்காலி. ஒரு ஷெல்·பில் தூசு படிந்து இரண்டு மூன்று கேமராக்கள். லென்சுகள். புகைப்படங்கள் எடுக்க உபயோகிக்கப்படும் குடை ரி·ப்ளெக்டர் சமாசாரங்கள். ஓரிரு ட்ரைபாட் ஸ்டேண்ட். மேலும் என்னன்னவோ. ஒரு காலத்தில் அதிகம் புழக்கத்தில் இருந்த அறையாக இது இருந்திருக்கவேண்டும். இதை பூட்டி வைக்குமளவுக்கு என்ன கெட்டுப்போயிற்று
இப்பொழுது?

நான் வியப்பு மாறாமல் திரும்பிப்பார்த்தபோது அவர் அறைக்குள் வராமல் வெளியிலேயே நின்றிருந்தார். வருடங்கள் கடந்து தாக்குகிற நெடியில் எனக்கோ அங்கே நிற்கவே முடியவில்லை. ஜன்னல்களையெல்லாம் திறந்து விடலாமா என்று யோசித்தேன்.

என்ன இதெல்லாம் என்று நான் கேட்பதை என் புருவ நெளிவிலிருந்து உணர்ந்துவிட்டார் போல. மெல்ல உள்ளே வந்தார். அறையை நாலாப்பக்கமும் கண்களால் அளவெடுத்தார். அவர் முகபாவங்கள் லேசாக மாறின. அறுந்து தொங்குகிற சிலந்திவலைத் தோரணங்களிலும், குப்பையிலும், கலைந்து கிடக்கிற புத்தகங்கள், கிதார், கேமராக்கள் என்று ஒவ்வொன்றின் மேலும் அவர் பார்வை படிந்து மறைந்தது. லேசாய் அவர் கண்கள் பனித்து அதைத் தொடர்ந்து வெளிப்பட்ட அவர் குரல் கரகரத்திருந்தது.

“ஏழு வருடங்களுக்கப்புறம் இந்த ரூமைத் திறக்கிறேன்.”

ஏழு வருடங்களா? இருக்கலாம். இதன் பராமரிக்கப்படாத அவலட்சணக் கோலமே அதை சொல்லுகிறதே. நான் அவர் மேலும் பேசக் காத்திருந்தேன்.

“என்னைப் பற்றி உனக்குத் தெரியாததையெல்லாம் முதலில் சொல்லிடறேன்?” என்றார். நான் தலையாட்டினேன்.

நிறுத்தி நிதானித்து அவர் சொன்னார். “நான் அடிப்படையில ஒரு பயாலஜி ப்ரொபஸர். அதற்கப்புறம் போட்டோகிராபி மேல் இருந்த அதீத ஆர்வத்தினால வேலையை உதறிவிட்டு ஒரு முழுநேரப் போட்டோகிராபரா யிட்டேன். அப்புறம் வைல்ட் லை·ப் போட்டோகிராபில இன்ட்ரஸ்ட் வந்து கொஞ்ச நாள் பைத்தியமாய் காடு மலைன்னு அலைஞ்சேன். அப்றம் மாடலிங் போட்டோகிராபி. நிறைய பெரிய அட்வர்டைஸிங் ஏஜன்ஸிகளுக்கு வேலை செஞ்சிருக்கேன். முக்கியமான நகரங்கள்ல போட்டோகிராபி ஒர்க்ஷாப் நடத்தியிருக்கேன். என்கிட்ட கத்துகிட்ட நிறைய பேரு இப்ப அந்தத் துறையில பல சாதனை படைச்சிருக்காங்க. நிறைய அவார்டுகள் வாங்கியிருக்கேன். இதோ இங்க நீ பாக்கிறது எல்லாம் நான் எடுத்ததுதான். ஒண்ணு ரெண்டு சினிமாட்டோகிராபிகூட பண்ணியிருக்கிறேன். இப்ப கூட ஷிவ்ராம்னு சொன்னா இண்டஸ்ட்ரீல எல்லாருக்கும் தெரியும். ரொம்ப ரொம்பப் பாப்புலர். கொஞ்சம் ஜாம்பவான் மாதிரிதான் இருந்தேன்.”

நான் விழிவிரிய அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஷிவ்ராம் இவ்வளவு பெரிய ஆள் என்கிற விஷயத்தின் வியப்பில் அவரை நான் பிரமிப்புடன் வெறித்துக்கொண்டிருக்க அவர் தொடர்ந்தார்.

“உலகம் பூரா சுத்தினேன். நிறைய சம்பாதிச்சேன். பெரிய உயரத்துக்கு வந்தேன். எப்பவும் அலைச்சல். வேலை. வீட்டுக்கு என்னிக்காவது வருவேன். எப்பவும் புத்தகம் படிச்சுட்டு இருப்பேன். இதோ இது பூரா நான் கலெக்ட் பண்ணினது. கடைசில என்னாச்சு? என் பையனை கவனிக்காம விட்டுட்டேன். சின்ன வயசில அம்மாவை இழந்த பையன். கூடப்பிறந்தவங்க யாரும் கிடையாது. அவனுக்கு நிறைய பணம் குடுத்தேன். செல்லமா ஆனா தனியா வளர்ந்தான். ரொம்பத் தனியா! என்னோட அக்கறையும் கவனிப்பும், கண்டிப்பும் இல்லாம. நிறைய சுத்தினான். காலேஜ் படிக்கும்போது சிகரெட் கத்துக்கிட்டான். நான் பெரிசா கண்டுக்கலை. தண்ணி அடிக்க ஆரம்பிச்சான். எல்லாமே நிறைய. அப்புறம் போதைப் பழக்கம். நான் அதை சரியா கவனிக்க ஆரம்பிக்கும்போது ரொம்ப எல்லை மீறிப் போயிருந்தது. டி-அடிக்ஷன் சென்டர்ல விடும்படியா ஆயிடுச்சு. யாரும் கவனிப்பாரற்ற தனிமையில அவனுடைய இயல்பு நடவடிக்கையில நிறைய மாற்றம். கொஞ்சம் வயலண்டா ஆயிடுவான் அப்பப்ப. அப்றம் சைக்காலஜிஸ்ட்கிட்ட கன்ஸல்ட்.. இப்படி நிறைய நடந்தது.

கொஞ்சநாள் ஒழுங்கா இருந்தான். எனக்கு என் வேலை எப்பவும் சரியா இருந்தது. மறுபடி அவனை சரியா கவனிக்க முடியாம சந்தர்ப்பங்கள் அமைஞ்சுபோச்சு. ஒரு நாள் ஒரு நீண்டநாள் டூரிலிருக்கும்போது அவசர தகவல் கிடைச்சு வீடு வந்து சேர்ந்தேன் அவன் இதோ இந்த ரூமுக்குள்ளதான் செத்துக்கிடந்தான். அவன் செத்து மூணுநாள் கழிச்சுத்தான் அவனை இந்த ரூமுக்குள்ளேர்ந்து கண்டுபிடிச்சு வெளியே எடுத்தோம்.”

தழுதழுத்த குரலில் அவர் நிறுத்த நான் உறைந்துபோய் நின்றிருந்தேன். அந்தச் செய்தியின் அதிர்வை என் உடம்பு உள்வாங்கிக் கொண்டதில் சர்வ நரம்புகளும் நடுங்கின.

“ஐம் ஸாரி ஷிவ்.” என்றேன்.

“நானில்லாதபோது ஒருநாள் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கு. மஞ்சள் காமாலைன்னு சொன்னாங்க. அதோடயே நிறைய குடிச்சிருக்கான். உடம்பு தாங்கலை. போய்ட்டான். உனக்கு இன்னொன்னு தெரியுமா? அவன் நல்லா கிதார் வாசிப்பான்.” மறுபடி கொஞ்சம் நிறுத்தி “கவனிப்பில்லாத தனிமை அவனைக் கொன்னுடுச்சு. அதோ அந்த ஸோபால கவுந்து கிடந்தான் கடைசியா
பார்க்கும்போது.” என்றார்.

நான் திரும்பிப் பார்த்தேன். அப்போதுதான் அந்த அறையின் மீதிப் பகுதிக்குள் பிரவேசிக்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது உறுத்தியது. அதிகம் வெளிச்சமற்று இன்னும் இருண்டிருந்த பகுதிக்கு மெதுவாய் எட்டு வைத்து நடந்தேன். புத்தக ஷெல்·புகள் ஓரிடத்தில் முடிந்து சரேலென்று இன்னொரு ஷெல்·ப் தொடங்கியது. அதில் முழுக்க பாட்டில் பாட்டிலாக நிறைந்து கிடந்தன. அவைகளில் வெவ்வேறு அளவுகளில் நிறைந்திருந்த ஆல்கஹால் திரவங்கள். அதன் மூக்கைத் துளைக்கும் நெடி. ஒரு டீப்பாய். அதன் மேல் ஷ்ட்ரே. அது முழுக்க புகைத்த சிகரெட் துண்டுகள் ஏராளமாய் கிடந்தன. அது தவிர நிறைய சிகரெட் டப்பாக்கள். பின் ஓரிரு சிரிஞ்சுகள். அப்புறம்.. அப்புறம்.. அப்போதுதான் நான் அதைப் பார்த்தேன். ஒரு அலமாரியில் புத்தகங்கள் பாதி எரிந்து கரியாய்க் கிடந்தன. என்ன இது?

“அவன் எரிச்சதுதான். ஒரு நாள் எம்மேல இருந்த கோவத்துல” என்றார் ஷிவ்ராம். “அவன் இறந்தப்ப இந்த ரூம் எப்படியிருந்ததோ அப்படியே விட்டுட்டு இந்தக் கதவைப் பூட்டிட்டேன். ஒரு பொருளை நகர்த்தலை. அப்புறம் திறக்கவும் இல்லை. யாரையும் உள்ளே விடவும் இல்லை. ஒரு மனுஷன் எப்படி வாழக்கூடாதுங்கறதுக்கு ஒரு மோசமான உதாரணம் இந்த ரூம். ஒரு அப்பங்காரன் தன் பிள்ளைங்ககிட்டே
எப்படியிருக்கணுங்கறதுக்கும்கூட. இல்லையா? எனக்கு எல்லாத்துலேயும் பிடிப்பு போய்டுச்சு. ரொம்ப கில்டியா ·பீல் பண்ணினேன். என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா எனக்கே கேவலமா இருந்தது. எதுக்காக வாழ்ந்தேன்? எதுக்காக அவார்டு? விரக்தியடைஞ்சு எல்லாத்தையும் விட்டுட்டேன். போட்டோகிராபி உட்பட. இப்ப எனக்கு எதுவும், யாரும் கிடையாது. இதையெல்லாம் மனசுவிட்டு யார்கிட்டேயும் சொல்லணும்னுகூட தோணினதே கிடையாது. யாரும் கேட்டதும் இல்ல. கேட்டாலும் சொல்ல மாட்டேன். என் வைராக்கியத்தை முதல் முதலா நீ உடைச்சிருக்க”.

இதைச் சொல்லிவிட்டு ஷிவ்ராம் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். திடீரென்று கனத்துப் போன மனசுடன் நான் திகைத்து நின்றிருந்தேன். என் பிரியத்துக்குரிய ஒரு மனிதரின் பின்னால் இத்தனை பெரிய சோகம் இருக்குமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் முன் ஒரு புதிராய் மெளனமாய் இருந்த இந்த அறை இப்போது தன்னை திறந்து காட்டி தன் அவலங்களையும் மர்மங்களையும் வெளிப்படுத்திவிட்டது. என்ன செய்யப் போகிறேன் நான்? ஷிவ்ராமுக்கு! ஒரு மாபெரும் இழப்பை என்றும் உணர்த்திக்கொண்டிருக்கும் இந்த அறைக்கு! அவர் விரும்பிப் படித்த புத்தகங்களுக்கு!.

எனக்கு என் அப்பாவும், அவர் புத்தகம் படித்துக்கொண்டு கிடக்கிற அவரின் அறையும் ஞாபகத்துக்கு வந்தது. அதற்குள் ஒரு நாளாவது நுழைந்திருப்பேனா? ஒரு நாளாவது அங்கே அவருடன் அமர்ந்து ஒரு கொஞ்ச நேரம் பேசியிருப்பேனா? பெரியவனானதுக்கப்புறம் எப்படியெல்லாம் அவர் வார்த்தைகளைப் புறக்கணித்திருக்கிறேன். வாஞ்சையுடனான அவர் பார்வைகளைப் தவிர்த்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது.

இந்த அறை இப்படியே கிடந்துவிடவேண்டுமா? நான் மெதுவாய் ஷெ·ல்பிலிருந்து ஒரு கேமராவை எடுத்தேன். நல்ல விலையுயர்ந்த கேமரா அது. அதைப் சுற்றிப் பொதிந்திருந்த தூசியை ஊதினேன். கர்ச்சீப் எடுத்துத் துடைத்தேன். அதன் வியூ ·பைண்டரின் வழியே கண்ணைப் பொருத்தி அந்த அறையைப் பார்த்தேன். அறை ஒரு மகா அமைதியுடன் என்னைப் பார்ப்பதுபோலிருந்தது. அதை எடுத்த இடத்தில் வைத்தேன்.

இழந்தவைகள் இழந்தவைகளாக இருந்துவிட்டுப் போகட்டும். இருப்பவைகள் வெறுமையாகாமல் ஏதாவது ஒன்றால் நிரப்பப்பட்டேயாகவேண்டும். அது மட்டும் புரிந்தது. ஷிவ்ராமுடன் எனக்கிருக்கிற நட்பும் நெருக்கமும் இப்போது இன்னும் அதிகமாய் கதவு திறந்துவிட்டன. திறந்த கதவுக்குப்பின் ஹோவெனப் பரந்து கிடக்கிற வாழ்வின் மீதிக்கு வேறு ஏதாவது வேண்டும்.

அறைக்குள்ளிருந்து வெளிவரும்போது சுவரில் சாய்த்து வைக்கப்பட்ட கிதார்களைப் பார்த்தேன். வா என்று என்னை இழுத்ததுபோல் நான் அதனருகில் போனேன். ஒரு கிதாரைக் கையில் எடுத்து மெதுவாய் அறுந்து போகாமல் மிஞ்சியிருந்த நரம்பில் விரலால் சுண்டினேன். “டிய்ங்” என்று அதிர்ந்து கிளம்பிய இசை தூசிகளைக் கிளப்பி அந்தப் பெரிய அறையின் மெளனத்தை ஊடுருவி நிறைந்தது.

Advertisements

One thought on “அறை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s