ஆரஞ்சுப் பழங்கள்

செந்தமிழ் டாட் காம் 2006

இரவு மணி ஒன்பதரை ஆகிவிட்டது. முதல் தெரு முக்கில் சோடியம் விளக்குக்கடியில் அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். வேணு விரல்களினிடையே சிகரெட் சாம்பலைத் தட்டினான். இந்த இரண்டு மணி நேரத்தில் நாலாவது சிகரெட். ஒரு நீண்ட பேச்சுக்கப்புறம் விடைபெறும் தருணம் போன்ற சூழ்நிலை இருவருக்குள்ளும் விரவி நின்றது. பெங்களூர்க் காற்று குளிர் கண்டிருந்தது. யாரையோ இறக்கிவிட்டு ஒரு ஆட்டோ திரும்பியது. மற்றபடி ஆள் நடமாட்டமற்று தெரு நீண்டிருந்தது.கார்த்தி மறுபடி வாட்சைப் பார்த்தான். அதற்குள் ஒன்பதரை மணி ஆகிவிட்டது என்றான். அவன் அப்படிச் சொல்வது இரண்டாவது தடவை. அவனுக்கு நேரமாகிவிட்டது என்பதை மறைமுகமாக உணர்த்துகிறான். வேணுவுக்குக் கிளம்ப மனசில்லை. இப்படி யாருடனாவது நின்று மனம்போன போக்கில் எதையாவது பேசிக்கொண்டேயிருக்கலாம் என்று தோன்றியது. அல்லது இப்படியே டவுன் பஸ் ஏறி மெஜஸ்டிக் போய் வேறொரு பஸ்ஸோ ட்ரெயினோ பிடித்து கோயமுத்தூருக்குப் போய்விடலாம் என்று தோன்றியது.

இப்போதைக்கு அது சாத்தியமில்லை. அவனுக்காக பெரியம்மாவும் பெரியப்பாவும் காத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் அவனைக் காணாவிடில் அவர்கள் கார்த்தியின் வீட்டுக்குக்கே தேடி வந்து விடக்கூடும். வேணு அவனிடம் விடை பெற்றுக்கொண்டு ஆர்.ஆர் லே-அவுட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஒரு ஹால்ஸ் மிட்டாயை பிரித்து வாயில் அடக்கிக் கொண்டான். கையில் வைத்திருந்த •போல்டரில் அன்று அவனுக்குக் கிடைத்த வேலையின் அப்பாயிண்ட் ஆர்டர் ஏகத்துக்கு கனப்பதுபோல் உணர்ந்தான். அதை அந்தக் கம்பெனியிலிருந்து வெளியே வந்தவுடன் கிழித்துப்போட்டுவிடத்தான் விருப்பமாயிருந்தது.

பெரியப்பாவுக்குத் தெரிந்த ஏதோ பெரிய மனிதரின் சிபாரிசின் பேரில் கிடைத்த வேலை. பெரியப்பா அவனுக்காக ரொம்பவே சிரமம் எடுத்துக்கொள்கிறார். ஆர்டர் கையில் கிடைத்தவுடன் உடனே கொண்டுவந்து பெரியப்பாவிடம் காண்பித்திருக்கவேண்டும். ஆனால் ஏனோ அது அவனுக்குத் தோன்றவில்லை. அவன் நேராக கார்த்தியைப் பார்க்கப் போய்விட்டான்.

கார்த்தியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான். தயக்கம் பின்னி இழுக்கிற கால்களுடன் பெரியம்மாவின் வீட்டை நெருங்கும்போது பெருமூச்சாக வந்தது. கடந்த பத்து நாளாக தவிர்க்க முடியாமல் தினசரி இந்த உணர்வுதான். அவன் நினைத்தமாதிரியே பெரியம்மாவும் பெரியப்பாவும் வாசற்படியிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் ரோஸ் நிற நைட்டியணிந்த எதிர்வீட்டுப் பெண்ணும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது. இவனைப்பார்த்ததும் எழுந்துகொண்டது. அவள் கை அநிச்சையாய் நைட்டியை கழுத்துப்பக்கம் இழுத்துவிட்டுக்கொண்டது.

“நான் சொன்னேன்ல? வேணுன்னு.. அது இவந்தான்.” என்றார் பெரியம்மா அந்தப் பெண்ணிடம். அறிமுகப்படுத்திவைத்த பாவத்துக்கு “ஹலோ” என்றான் வேணு. அவளும் தயக்கமாய் ஒரு ஹலோ சொல்லிவிட்டு ‘வர்றேன் ஆன்ட்டி’ என்று எழுந்து போய்விட்டாள்.

“உனக்காகத்தான் காத்துட்டிருக்கோம். இவ்வளவு நேரம் எங்க போயிட்ட?” என்றார் பெரியப்பா.  பெரியம்மா எதுவும் கேட்காமல் வழக்கமான புன்சிரிப்புடன் அவனைப் பார்த்தார்.

உள்ளே போனதும் முதல் வேலையாய் அப்பாயிண்ட் ஆர்டரை எடுத்து நீட்டினான் அவன். “செலக்ட் பண்ணிட்டாங்க பெரீப்பா! திங்கக்கிழமைலேர்ந்து வரச்சொன்னாங்க”

“தெரியும். பின்ன கெடைக்காமலா இருக்கும்? பெரிய சிபாரிசு”

பெரியப்பா அவனை முதுகில் தட்டிக் கொடுத்தார். “நல்ல கம்பெனி. அங்கெல்லாம் வேல கெடைக்கறது கஷ்டம். அப்படியே கெட்டியா புடிச்சு படிப்படியா முன்னேறப்பாரு..” என்றார். பிறகு டைனிங் டேபிள் கூடையிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து சுளைகளை உரித்துக்கொண்டே மேலும் சில உபதேசங்கள் சொன்னார். அவர் அனுபவத்துக்கு அவை எல்லாம் சரியான உபதேசங்களே என்றாலும் அவனுக்கு அதில் மனம் லயிக்கவில்லை. வெறுமனே தலையாட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். பெரியப்பா உரித்த சுளைகளை தட்டில் வைத்து வேணுவிடம் நீட்டினார். பெரியம்மா சமையல் முடிக்கிறவரை அதைச் சாப்பிடுமாறு சொன்னார்.  வேண்டாம் என்று சொன்னால் பெரியப்பா என்ன சொல்வார் என்று தெரியும். அவன் தட்டிலிருந்து பேருக்கு ஒன்றை எடுத்து விழுங்கிக்கொண்டான். பெரியம்மா அடுப்பில் குக்கரை வைத்துவிட்டு வந்தார். என்ன மாதிரி வேலை, எத்தனை மணிக்குப் போகவேண்டும், கேண்டீன் இருக்கிறதா என்றெல்லாம் விசாரித்தார். பிறகு, வேணு ஒரு வருடம் முன்பே இங்கே வந்திருந்தால் எப்போதோ அவனுக்கு வேலை கிடைக்கச் செய்திருக்கலாமென்றும், ஒரு வருடத்தை அவன் வீணாய் கழிக்க நேரிட்டது குறித்தும் சொல்லிக் கொண்டிருந்தார். அதைச் சொல்வது பத்தாவது தடவை. வேணு வலுக் கட்டாயமாய் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அமைதியாய் உட்கார்ந்து கொண்டிருந்தான். திடீரெனத் தோன்றிய அலுப்பிலும் மனத் தளர்விலும் அவனுக்குப் பேசாமல் போய் படுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. சாப்பிடாமல் படுப்பதாவது! அப்புறம் பெரியம்மாவிடமிருந்து உரிமையாய் பாட்டுக் கேட்க நேரிடும்.

கொஞ்ச நேரத்தில் சமையல் முடிந்து பெரியம்மா வந்தார். அவனை முகம் கழுவி விட்டு வரச் சொன்னார். பாத்ரூமில் பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறதென்றார். டர்க்கி டவலை நீட்டினார். அவனிடமிருந்து பெருமுச்சொன்று புறப்பட்டது. பாத்ரூமில் குழாயைத் திறந்தால் தண்ணீர். என்றாலும் பெரியம்மா தவறாமல் அவனுக்காக பக்கெட்டில் நிரப்பி வைத்து விடுவதும், கைக்கெட்டுகிற தூரத்தில் இருக்கிற துண்டை அவன் முகம் கழுவினதும் நீட்டுவதும்.. ஹ¥ம்ம்.. கழுவின முகத்தைத் துடைத்துவிடுவது ஒன்றுதான் பாக்கி. இது தினசரி நடக்கிற விஷயம்தான். எல்லாமே ஒரு கனிந்த அக்கறையின் பொருட்டுதான் என்றாலும் அவனுக்கு அது சலிப்பாய் இருந்தது. எல்லாமே அவனே செய்து கொள்ளக் கூடிய சின்னச் சின்ன வேலைகள்தான். ஆனால் அதையெல்லாம் எதற்காக இப்படி பெரியம்மா இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறாள் என்று லேசான எரிச்சல் கூட எழுந்தது அவனுக்கு.

முகம் கழுவும்போது திங்கட்கிழமை முதல் வேலைக்குப் போகவேண்டுமே என்ற நினைப்பு எழுந்தது. உடனே தலையை உலுக்கிக் கலைத்தான். தொடர்ந்து பெரியம்மா வீட்டிலே இருக்க வேண்டிய சூழ்நிலை பற்றி அதற்குமுன் நிறைய யோசித்தாக வேண்டும். வேணு ரொம்பக் குழப்பமாக உணர்ந்தான்.

ஏனென்று தெரியாமல் அவனுக்குள் ஒரு வாரமாய் தொடர்ந்து கொண்டிருக்கிற அவஸ்தை. இப்போது வேலை கிடைத்ததும் இன்னும் அதிகமாகிவிட்டது. வேறு யாராவதாக இருந்திருந்தால் பெரியம்மாவின் இத்தகைய
கவனிப்பில் உருகிப் போயிருப்பார்கள்தான். கவனிப்பென்றால் சும்மா அப்படி இப்படி இல்லை. ராஜ கவனிப்பு! சொந்தப் பையனை எப்படி கவனித்துக்கொள்வார்களோ அப்படி! ஆனால் வேணு அதை காலில் குத்தின முள்ளை அகற்றிய பின்னும் இருக்கிற நெருடல் உணர்வு மாதிரி உணர்ந்தான். இதென்ன தவழ்கிற குழந்தைக்கு அளிக்கிற மாதிரி முழு நேர கவனிப்பு? விருந்தாளிகளைக் கவனிக்கிற மாதிரி சதா உபசரிப்பு. கூட்டணிக்கு இந்தப் பெரியப்பா வேறு. ஆரஞ்சுப் பழத்தை எனக்கு உரித்துச் சாப்பிடத் தெரியாதா?

பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் குழந்தைகள் இல்லை. வேணுவை இத்தனை கவனிப்பதற்கு அதுதான் காரணமோ என்னமோ!? இருந்தாலும் இந்த கவனிப்பு எனக்கு முள் படுக்கை மாதிரி இருக்கிறது என்று சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும்போல் இருந்தது அவனுக்கு! வேணு சின்னப் பையனாய் இருந்தபோது ஸ்கூல் லீவு விட்டால் அடிக்கடி இங்கே வருகிற வழக்கம்தான். அப்போதெல்லாம் பெரியவர்களின் வேலைக்கும் அரட்டைக்கும் நடுவில் அவன் செய்கிற குறும்பும், புதுசு புதுசாய் எதையாவது நோண்டிக் கொண்டிருக்கிற ஆர்வமும், விளையாட இடமும், விளையாட்டுப் பொருட்கள் தேடுகிற மும்முரமும் மட்டுமே அப்போதிருந்தது. அப்போதிருந்த மாதிரியே அந்தக் கவனிப்பும் அன்பும் பெரியம்மாவிடம் இன்றைக்கும் மாறாமல்தான் இருக்கிறது. ஆனால் அவன்தான் வளர்ந்துவிட்டான். இப்போது மனசில் குடிவந்துவிட்ட பெரிய மனுஷத்தனத்தால் அதை முழுசாக ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுக்கத் தோன்றுகிறது.

பெரியப்பா வேணுவின் அப்பாவுக்கு ஏதோ விஷயமாய் •போன் பண்ணியதிலிருந்துதான் எல்லாமே ஆரம்பமானது. அவன் படித்துவிட்டு வேலையில்லாமல் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருப்பதாக அவன் அப்பா சும்மா இருக்காமல் பெரியப்பாவிடம் புலம்பிவிட்டார்.

“இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அவன இங்க பெங்களூர்க்கு அனுப்பு சாரங்கா! ஒரு வாரத்துல வேல வாங்கித்தர்றேன். இங்கிருந்தேகூட வேலைக்கு போய் வந்திட்டிருக்கட்டும்.”

போனை கீழே வைத்த கையோடு ஒரு மூட்டை உபதேசங்களையும், ட்ராவல் பேகையும் கையில் கொடுத்து அப்பா அவனை பெரியப்பாவிடம் அனுப்பிவைத்துவிட்டார். இதோ பெங்களூருக்கு வந்து பத்து நாட்களாகிவிட்டது. சொன்னபடி பெரியப்பா ஒரே வாரத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டார். அவனுக்கு வேலை கிடைத்த அலுவலகம் மல்லேஸ்வரம் ஏரியாவில் ரொம்ப பந்தாவாகப் பெரியதாகத்தான் இருந்தது. அதில் அட்மின் செக்ஷனில் ட்ரெயினியாக சேரச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு வருஷத்துக்கப்புறம் நிரந்தரமாக்குவார்களாம்.

எல்லாம் சரிதான். பெரியப்பாவின் சிபாரிசு பாதாளம் வரை பாய்ந்துவிட்டது. பின்னே இன்டர்வ்யூவில் சுரத்தேயில்லாமல் பதில் சொன்ன அவனை வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள் என்றால் சும்மாவா? அங்கே இன்டர்வ்யூவுக்குப் போவதற்கேகூட அவனுக்கு அத்தனை சலிப்பாகத்தான் இருந்தது. அப்பா சொன்னதற்காக பெங்களூர் வந்தான். பெரியப்பா சொன்னதற்காக இன்டர்வ்யூவுக்குப் போனான். தன் வாழ்வு யாராலோ இயக்கப்படுவதாகவும், யாரோ போட்ட கோட்டில் அவன் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவ்வப்போது தோன்றுகிற நினைப்பால் அவனுக்கு ரொம்ப ஆயாசமாக இருந்தது. செலவுக்குக் காசிருக்கிறதாஎன்றுகேட்டு அவன் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அவன் பாக்கெட்டில் முந்நூறு ரூபாயைத் திணித்திருந்தார் பெரியப்பா. ஒவ்வொரு கிங்ஸ் புகைக்கும்போதும் அது வேறு உறுத்திக்கொண்டேயிருக்கிறது. கார்த்தி பெங்களூரில் இருப்பது ஒரு ஆறுதல். அதுவும் பெரியப்பாவின் வீடிருக்கிற ஏரியாவிலேயே அவன் வசிப்பது வேணுவின் அதிர்ஷ்டம். வந்த பத்துநாட்களுக்குள் அவனுடன் சேர்ந்து இரண்டு சினிமா பார்த்துவிட்டான்.

“இன்னிக்கு நான் ஸ்பெஷலா பாயசம் பண்ணியிருக்கேன். நியாயமா இன்னிக்கு நீ ஸ்வீட்டோட வீட்டுக்கு வந்திருக்கணும். பரவாயில்லை. முதல் சம்பளத்திலயாவது ஏதாவது வாங்கிட்டு வர்ரியான்னு பாப்போம்”
சாப்பாடு பரிமாறும்போது பெரியம்மா சிரித்தபடி சொன்னார். மனதில் நெருடிய குற்ற உணர்வை மறைத்துவிட்டு பொதுவாய் சிரித்து வைத்தான். வேலை கிடைத்த விஷயத்தை அப்பாவுக்கு இன்னும் போன் பண்ணிச் சொல்லவில்லை என்பது திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது.

“பெரீப்பா கோயமுத்தூருக்கு ஒரு போன் பண்ணிக்கட்டுமா?”

“உங்கப்பாவுக்குத்தானே? நீ இன்டர்வ்யூ முடிச்சவுடனேயே உன்னை செலக்ட் பண்ணிட்டதா எனக்கு போன் வந்துரிச்சு. நான் மத்தியானமே அவனைக் கூப்பிட்டுச் சொல்லிட்டேன்.” பெரியப்பா பெருமிதமாய்
சிரித்தார்.

சாப்பிட்டுவிட்டு வாசற்படியில் இளைப்பாற நின்றபோது பின்னாலிருந்து பெரியம்மாவின் குரல் கேட்டது. “படுக்கை தட்டிப் போட்டிருக்கேன். டயர்டா இருந்தா பால் சாப்டுட்டு போய் படுத்துக்கோ! இல்ல டி.வி பாக்கறதுன்னா பாரு! ரூம்ல கொசுவத்தி பத்த வெச்சிருக்கேன்.”

இன்றைக்கு ஒரு முடிவுக்கு வந்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஒன்றோ கிடைத்த வேலையில் சேர்ந்து கொண்டு இங்கேயே இருப்பது. அல்லது கோயமுத்தூருக்கு மூட்டையைக் கட்டிவிடுவது. பின்னதுதான் உசிதம் என்று தோன்றியது. அங்கே போய் ஏதாவது ஒரு சின்ன வேலை கிடைத்தால்கூடப் பரவாயில்லை. அவன் வீட்டிலிருந்தே சுதந்தரமாய் போய் வந்து கொண்டிருக்கலாம். சுதந்திரம்! ஆம் அது ரொம்ப முக்கியம். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை இழந்துவிடக்கூடாது. மேலும், அம்மா கையால் சாப்பாடு. எத்தனை கொடுத்தாலும் ஈடாகாத விஷயமில்லையா அது?

வெப்பத்தைத் தாங்க முடியவில்லையெனில் சமையலறையை விட்டு வெளியேறுங்கள் என்று காப்மேயர் கூட சொல்லியிருக்கிறார். பெங்களூர் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்? இந்த அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரைக் கிழித்துப் போட்டுவிட்டு ஞாயிற்றுக் கிழமை ட்ரெயின் ஏறி விடவேண்டியதுதான். என்ன இருந்தாலும் சொந்த ஊரும் வீடும் மாதிரி வராது. அவன் சடுதியில் தீர்மானித்துவிட்டான். அம்மாவையும், பெரிம்மாவையும் எப்படியாது சமாளித்து விடலாம். அப்பாவும், பெரியப்பாவும்தான் அதிர்ச்சியாகிவிடுவார்கள். முக்கியமாய் பெரியப்பா ஏதாவது நினைத்துக்கொள்வாரோ என்று லேசாய் பயமாயிருந்தது. என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டால் என்ன?. என் எண்ணங்களையும், சுதந்திரத்தையும் முன் வைத்து என்னை இருப்பை நிரூபித்துக்கொள்ள வேண்டிய நேரமிது என்று நினைத்துக்கொண்டான். யாரோ சொல்கிறார்கள் என்று எதையாவது செய்வதாவது? அப்புறம் என் கருத்தென்று என்னதான் இருக்கிறது? அந்த முடிவுக்கு வந்தபிறகு வேணு கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தான்.

பக்கத்து வேப்ப மரம் சிலுசிலுவென்று காற்றை அனுப்பியது. மேலே வானத்தில் அரை நிலாவும் ஒரு சில மேகப்பஞ்சுகளும் இருந்தன. எங்கிருந்தோ “பவ்” என்று குரல் கேட்டது. வேணு திடுக்கிட்டுத் திரும்பினான். எதிர் வீட்டிலிருந்து கேட்டைத் திறந்து ரோஸ் நைட்டிப் பெண் பாமரேனியன் நாய்க்குட்டியுடன் வெளிப்பட்டதைப் பார்த்தான். அவளது பேரைத் தெரிந்துகொள்ளாமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டான்.

முன் வாசல் ட்யூப்லைட் வெளிச்ச உபயத்தில் பளபளக்கிற கண்களுடன் அவள் வேணுவைப் பார்த்துச் சிரித்தது மந்தகாசமாய் இருந்தது. அவன் ஒரு நொடி சிலிர்த்துத் தடுமாறி பதிலுக்குச் சிரித்து வைத்தான். எப்படி அவள் இத்தனை நாள் கண்ணில் படாமல் போனாள் என்று யோசித்தான்.

திங்கட்கிழமை காலை பெரியம்மா பூஜை செய்து கொடுத்த விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு இருவர் காலிலும் விழுந்து நமஸ்கரித்துவிட்டு நன்றாய் அயர்ன் பண்ணின உடையணிந்து, பாலிஷ் இடப்பட்ட ஷ¤வுடன் ஆ•பிஸ¤க்குக் கிளம்பினான். மறக்காமல் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை எடுத்துக்கொண்டான்.


Advertisements

3 thoughts on “ஆரஞ்சுப் பழங்கள்

  1. காதலியர் கடைக்கண் பார்த்துவிட்டால் மாமலையும் ஓர் கடுகாம்….

    ரோஸ் நிற நைட்டி ஒரு நல்ல catalyst அக இருந்தால் சரி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s