முன்பதிவு
மரத்தடி.காம்
மெளனம் கலைந்து
நகர்ந்த ரயில்.
சூரியனை உள்வாங்கிச்
சிலிர்த்த தண்டவாள வெயில்.
தற்காலிக இடம்பெயர்தலாய்
இன்னொரு பயணம்.
இன்னொரு சேருமிடம்.
டிபன் பாக்ஸில் பசியாறும் குடும்பம்.
பிஸ்லெரியில் தாக சாந்தி.
கைமாறும் ஓசிப் பேப்பர்.
ஆரஞ்சுப் பழங்களின்
பரிமாற்றம் வரை வந்த..
நீங்க எந்த ஊர் என்று
தொடங்கின ஸ்நேகம்.
தோளில் ·ரைபிளுடன்
ஊடுருவிக் கடந்த காவல்.
பொதுஅறிவுப் புத்தக விற்பனை.
குழந்தைகளுக்கான பீப்பி. சீதாப்பழம்.
குழிந்த கன்னங்கள்
வாழ்வின் கடைசி இழுப்புபோல் முதியவர்
ஆழமாய் உறிஞ்சி வீசிய பீடி.
விரைகிற கம்பங்கள்.
நாரை நின்ற நீர்நிலை.
செம்மண்மேடு. அம்மணச்சிறுவன்.
அடுத்தவேளை சில்லறை தேடிய
ஆர்மோனியம்.
இழந்த கைக்கா
இருக்கின்ற கைக்கா
என்ற சந்தேகத்துடன்
முடவனுக்கிட்ட ஐம்பது பைசா.
தனக்குமட்டுமான இசை லயிப்பில்
ஆழ்கிற வாக்மென்.
இக்கணத்தின் இருப்பிடம்பற்றி
உறவினனுக்கு
தகவலறிவிக்கிற செல்பேசி.
ப்ளாட்பாரங்களில்..
ரயில்வே கேட்டில்
நிறைய பேரின் காத்திருப்பு.
நான் கடந்தபின்தான்
அவர்கள் போகமுடியும்.
சென்ற முறை விபத்தில்
உயிர்களை பலிகொண்ட
பாலத்தின்மேல்
பயமில்லாமல் தடதடக்கிற ரயில்.
படபடக்கிற மனது.




